அமெரிக்கர்களைக் 'காத்த' இந்திய நிறுவனங்கள்!
டெல்லி: உலகப் பொருளாதார பெரு மந்தத்தின் பிடியில் அமெரிக்கா சிக்கித் தவித்த நேரத்தில், 2585 அமெரிக்கர்களின் வேலைகளைக் காப்பாற்றின அங்குள்ள இந்திய நிறுவனங்கள், என சிஐஐ (Confederation of Indian Industry) தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்ல, அமெரிக்காவில் உள்ள 35 டாப் இந்திய நிறுவனங்கள் அந்நாட்டின் 40 மாகாணங்களைச் சேர்ந்த 60000 பேருக்கு வேலை தந்துகொண்டிருப்பதாகவும் இந்த அமைப்பின் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய நிறுவனங்கள், அமெரிக்க மண்ணில் எந்த அளவுக்கு வேரூன்றி, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைநிற்கின்ற என்பது குறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த விழாவில் பேசிய அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர், "இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு மிகுந்த இணக்கமாகவும், ஒத்துழைப்பு தரும் வகையிலும் செயல்படுகின்றன என்பதற்கு இந்த புள்ளி விவரங்களே சான்று", என்றார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள் அனைத்தும் 80 சதவீதம் உள்ளூர் அமெரிக்க பணியாளர்களையே பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2010-ல் இந்தியாவுக்கு ஒபாமா வந்திருந்தபோது 14.9 பில்லியன் டாலர் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும் 9.5 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க ஏற்றுமதி பெருகவும் கையெழுத்திடப்பட்டது. இந்திய நிறுவனங்கள் மூலம் 53670 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தங்கள் அனைத்துமே முழூவீச்சில் நடைமுறைக்க வந்திருப்பதாகவும், இந்திய நிறுவனங்கள் முடிந்த அளவு அதிக வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு வழங்கும் என்றும் மீரா சங்கர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க செனட்டர் கார்னைன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு, இரு தரப்புக்குமே பலனளிக்கக் கூடிய வகையில் இருப்பதை சுட்டிக் காட்டினார்.
சிஐஐ துணை இயக்குநர் கிரண் பரிச்சா உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications