தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் காங். கூட்டணி: பாஜக
உளுந்தூர்பேட்டை & திருச்சி: தமிழக மக்கள் திமுக, அதிமுக மீது வெறுப்பில் உள்ளனர். நாங்கள் தமிழகத்தில் சக்தி வாய்ந்த எதிர்கட்சியாக இருந்து மககளுக்காக குரல் கொடுக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் லோக்சபா பாஜக எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்.
திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு சுஷ்மா சுவராஜ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
காங்கிரஸ் கட்சியின் அனைத்து ஊழல்கள், விலைவாசி உயர்வு பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால், சம்பந்தப்பட்ட நபர்களை கைகாட்டிவிட்டு பிரதமர் மன்மோகன் பதில் அளிக்க மறுக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் மத்தியில் துவங்கி தற்போது உங்கள் தொகுதி வரைக்கும் வந்துள்ளன. ரூ. 900க்கு விற்பனையான ஒரு லோடு காவிரி மணல் தற்போது ரூ. 3 ஆயிரத்து 500-க்கு விற்கப்படுகிறது.
உங்கள் பணம் ரூ. 2 ஆயிரத்து 600 கொள்ளையடிக்கப்படுகிறது. திராவிடக் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கி தமிழக மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டன. உங்களுக்காக குரல் கொடுக்க, ஆக்கப்பூர்வமான பணிகள் செய்ய பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழக மக்கள் திமுக, அதிமுக மீது வெறுப்பில் உள்ளனர். நாங்கள் தமிழகத்தில் சக்தி வாய்ந்த எதிர்கட்சியாக இருந்து மககளுக்காக குரல் கொடுக்க விரும்புகிறோம். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல்களை கண்டித்தும், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கான புனரமைப்பு பணிகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம்.
தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு இடையூறு செய்வது, திருச்சியில் ரூ. 5.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. இது போன்ற நடவடிக்கைளால் ஜனநாயக கட்டமைப்பை சீர்குலைக்க நினைக்கின்றனர். இந்த தேர்தலில் நாங்கள் நல்ல எண்ணிக்கையில் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வோம். 2ஜி ஊழல் விவகாரத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி பாஜக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அவசரகால நிலை என்று கருணாநிதி கூறியிருப்பது விரக்தியின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது என்றார்.
'தேர்தலுக்குப் பின்னர் காங்.குடன் கூட்டணி வைக்கும் அதிமுக'
இதற்கிடையே, தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று என்ன உத்தரவாதம் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அன்பு அருளை ஆதரித்து உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியாதவது,
தமிழகத்தில் திமுக-அதிமுக மோதுவதற்கு பதிலாக தேர்தல் ஆணையமும், திமுகவும் மோதிக் கொள்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கிறது. அதை நாங்களும் வரவேற்கிறோம். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தேர்தல் ஆணைய செயல்பாடுகளை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கண்டிக்க மற்ற கட்சியினர் வரவேற்கின்றனர்.
இப்படி எல்லாம் பேசுவதால் நான் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம்.
கடந்த 2006-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அதிமுக தேர்தல் ஆணையத்தை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்தியது. அனைத்து மட்டத்தில் இருப்பவர்களுக்கும் சாக்கு மூட்டைகளில் கட்டுகட்டாக பணம் திணித்து வருகிறது. இந்த பணம் எல்லாம் புதர்களிலும், சுடுகாட்டிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் தலைவர்களுக்கு வருத்தம், மக்களுக்கு மகிழ்ச்சி.
தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவே அமைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்றார்.












Click it and Unblock the Notifications