திராவிட இயக்கங்கள் விரைவில் ஒன்றுபடும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
மதுரை: திமுகவை மதிமுகவும் ஆதரித்துள்ளது. எனவே திமுக கூட்டணியின் வெற்றி அமோகமாக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரையில் முகாமிட்டுள்ள முதல்வர் கருணாநிதி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும்:

கேள்வி: திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

கலைஞர் பதில்: திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகத்துல்லியமாக இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் எங்கள் அணி வெற்றி பெறும்.

கேள்வி: எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள்?

பதில்: பெரும்பாலான இடங்களில்.

கேள்வி: மத்திய மந்திரி மு.க.அழகிரி 200 இடங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: ஒரு கட்சியிலே உள்ள அடுத்தகட்டத் தலைவர்கள் அவரவர்கள் விருப்பம்போல வெற்றி பெறவிருக்கின்ற இடங்களைச் சொல்வார்கள். இருந்தாலும் முதல் கட்டத்திலே இருக்கிற எங்களுக்கு பிடிபடாத கணக்கு, அவர்களுக்கு நேரடியாகக் கிடைத்திருக்கும். அந்த வகையில் அவர் சொல்லியிருக்கக்கூடும்.

கேள்வி: இந்த அளவிற்கு உங்கள் அணிக்கு அமோக ஆதரவு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

பதில்: திமுக அரசின் சாதனைகள் - அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஏழைகளின் குடிசைகளே இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு, அறிவித்து, 21 லட்சம் குடிசைகளை அகற்றி, அவற்றுக்குப் பதிலாக காங்க்ரீட் வீடுகளைக் கட்டுவதற்கான "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்'' முன்னேற்றகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கட்டி முடித்துள்ளோம். மீதமுள்ள வீடுகளை கழக ஆட்சி மீண்டும் வந்தால் கட்டி முடிப்பார்கள் என்ற எண்ணம் ஏழையெளிய மக்களுக்கு ஏற்பட்டதும் ஒரு காரணமாகும்.

கேள்வி: எதிர்க்கட்சிகள் குறிப்பாக மின் பற்றாக்குறையைப் பற்றி முக்கியமாக குறை சொல்கிறார்களே?

பதில்: மின் பற்றாக்குறை என்பது ஒரு தொடர் நிகழ்வு. தொழிற்சாலைகளுக்கு, வீட்டுப் பயனாளிகளுக்குத் தேவைப்படுகிற மின்சாரத்தை உற்பத்தி செய்ய முற்படும்போது மேலும் தொழிற்சாலைகள் வரத்தொடங்குகின்றன. தொழிற்சாலைகள் வளர வளர மின் தேவை அதிகப்படுகிறது. அதற்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இடையில் அதிமுக அரசு தமிழகத்தை ஆளுகிற நிலை ஏற்பட்டபோது, அவர்கள் மின் உற்பத்தியிலே எந்தக் கவனமும் செலுத்தவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்திருக்கிறது. எனினும் இப்போது இன்னும் கூடுதலாக மின் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் பல அண்மையில் தொடங்கப்பட்டு, அவைகள் நடைமுறைக்கு வருகின்ற நிலை உருவாகியிருக்கின்றது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்தத் திட்டங்கள் வரிசையாக நிறைவுறும். மின் தட்டுப்பாடு அறவே அகற்றப்படும்.

கேள்வி: மதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அண்மைக்காலமாக திமுகவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள். அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: பல இடங்களில் மதிமுக தொண்டர்கள், தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்கள் நேரடியான ஆதரவையும், மானசீகமான ஆதரவையும் தருவதாக நானும் அறிகிறேன். திராவிட இயக்கம் ஒன்றாக இருந்து உறுதிப்பட தங்களுடைய கொள்கைகளை நிறைவேற்ற வேண்டிய இயக்கம். ஆனால் இடையிடையே ஏற்பட்ட சில மாறுபாடுகளால் ஒற்றுமை குலைந்து மாற்றாருக்கு இடம் தருவதாக ஆகிவிட்டது. ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை காணுகின்ற சூழல் விரைவில் வரும் என்பதற்கு அடையாளம் தான் மதிமுகவினரும் இந்தத் தேர்தலிலே சில பல இடங்களில் எங்களை ஆதரிக்கின்ற செயலாகும்.

கேள்வி: தமிழ்நாட்டை மீட்டெடுக்கப் போகிறேன் என்று ஜெயலலிதா பிரசாரம் செய்கிறாரே?

பதில்: அவர்கள் முதலில் பெங்களூரில் நீதிமன்றத்திலே இருக்கின்ற வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கிலே இடம் பெற்ற அவருடைய நகைகளை மீட்கட்டும்.

கேள்வி: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இந்த அளவிற்கு கடுமையாக இருப்பதைப் பற்றி?

பதில்: தேர்தல் ஆணையம் என்பது தன்னை ஒரு அரசியல் கட்சியாக ஆக்கிக்கொள்ளாமல் நடுநிலையாக பணிபுரிய வேண்டிய ஆணையம் ஆகும். நீதிமன்றத்தைப்போல அவர்கள் அந்த ஆணையத்தை நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்றங்களே சில நேரங்களில் தடுமாறுவதைக் காணும்போது, தேர்தல் ஆணையத்தில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளுகிற நிலையை வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. தேர்தல் ஆணையம் எவ்வளவு கண்டிப்பாக இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் கிரிக்கெட் உலகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மற்ற மாநிலங்கள் அறிவித்ததைப் போல, திமுக அரசும், அதாவது தமிழக அரசும் ஏறத்தாழ நான்கு கோடி ரூபாய் அளவுக்கு பரிசினை அறிவித்தது. ஆனால் இது போன்ற அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறவேண்டும். அந்த அனுமதியை நாங்கள் முறைப்படி பெற்றிருக்கிறோம். அனுமதி என்ன நிபந்தனையோடு தரப் பட்டிருக்கிறது என்றால், அந்தக் கிரிக்கெட் வீரர்களுக்கோ, சங்கத்திற்கோ முதல்வர் அந்த பரிசுகளை வெகுமதியை நேரடியாக வழங்குவது போல புகைப்படம் எடுத்து வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையோடு வழங்கப்பட்டிருக்கிறது.

பதவி இழந்த அதிகாரிகள்

கேள்வி: தேர்தல் ஆணையம் மதுரையிலே தான் அதிகக் கெடுபிடி செய்கிறது. மத்திய மந்திரி மீது ஒரு அதிகாரியின் மூலம் ஒரு பொய்ப் புகார் கொடுக்கச் செய்து, அதன் மீது வழக்கு போட்டிருக்கின்றார்களே?

பதில்: நான் இதிலே ஒப்பிட்டுப் பார்ப்பது மத்திய மந்திரி மீது இன்றைய எதிர்க்கட்சியாக இருக்கின்ற ஜெயலலிதா மற்றும் அவர்கள் அணியினர் எப்பொழுதுமே கோபம் காட்டி வருபவர்கள். தங்கள் ஆதிக்கத்திலிருந்த மதுரை மாவட்டத்தில் இன்றைய மத்திய மந்திரி செல்வாக்குப்பெறுவதும் இந்த மாவட்டத்திற்குத் தேவையான பல வசதிகளை, நல்ல காரியங்களை நடத்தி வருவதும் எதிர்க்கட்சிக் கூட்டணியினுடைய வெறுப்பைத்தான் சம்பாதித்திருக்கிறது. அதனால் அவர்கள் மத்திய மந்திரி மீது அடிக்கடி பொய்ப்புகார்களைக் கூறி வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதவியிழந்து ஓய்வு பெற்றிருக்கின்ற ஒரு சில முக்கியமான அதிகாரிகள் இருப்பதாகவும், அவர்களின் உதவியைக் கொண்டு தான் தேர்தல் ஆணையம் இப்போது செயல்படுகிறது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக்கூடாது என்பது என்னுடைய கருத்து.

கேள்வி: சில மாநில அதிகாரிகளும், கலெக்டரும், அ.திமுகவிற்கு ஆதரவு தருவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: அரசியலிலே மாத்திரமல்ல - அதிகார வர்க்கத்தினரிலே கூட எட்டப்பர்கள் உண்டு.

கேள்வி: நேற்றையதினம் கோவையிலே நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அந்த அணியிலே உள்ள ஒரு கட்சியின் தலைவர் வரவில்லையே, குறிப்பாக விஜயகாந்த் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டாரே?

பதில்: ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு பேசியிருக்கிறாரே, அது போதாதா? அப்படி வந்தது மாத்திரமல்ல, திமுக குடும்பக் கட்சி என்று பேசியிருக்கிறார். குடும்பக் கட்சியாக இருக்கலாம் - ஆனால் சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தைக் குலைத்த கட்சி அல்ல.

கேள்வி: சினிமாவில் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்த இரண்டு பேரை - ஒரு காமெடியனான வடிவேலுவை வைத்து விமர்சனம் செய்யச் செய்திருக்கிறீர்கள். "பராசக்தி'' கலைஞராக இருந்து இதற்குப் பதில் சொல்லுங்கள்?

பதில்: இதற்கு வடிவேலு தேவையில்லை -நீங்கள் சொல்கின்ற கதாநாயகி, கதாநாயகன் பற்றி விமர்சனம் செய்வதற்கு ஒரு வடிவேலு தேவையில்லை - சாதாரண மக்களே போதும் - அவர்கள் நேரடியாக காணுகின்ற காட்சி - அவர்களே அதை நிரூபிக்கத் தகுதியானவர்கள்.

கேள்வி: மத்திய மந்திரி மு.க.அழகிரி டெல்லியை விட்டு விட்டு, தமிழ்நாட்டில் பணியாற்றுவதில் தான் அதிக விருப்பம் என்று சொல்லியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது அழகிரியின் தாய்நாட்டுப் பற்றைக் காட்டுகிறது. டெல்லியிலே அவர் பதவியிலே இருந்தாலும், அந்தப் பதவியை தமிழ்நாட்டுக்காகத்தான் முக்கியமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

கேள்வி: கோவையிலே நடைபெற்ற கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, ஜெயலலிதா முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார் என்று பேசியிருக்கிறாரே, அதற்குப் பொருள் என்ன?

பதில்: பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரை நீங்கள் சொல்லும்போது மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் ஞாபகம் தான் எனக்கு வரும். அவர் சாகும்போது என்னை அழைத்து - "எனக்குப் பதிலாக எங்கள் சமுதாயத்திலிருந்து ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டுமென்றால், பண்ருட்டி ராமச்சந்திரனைப் போன்ற துரோகிகளைப் போட்டுவிடாதீர்கள் -எனக்கு விரோதியாக இருந்தாலும் கடலூர் இளம்வழுதி போன்றவர்களை நியமியுங்கள் என்று சொன்னார். நான் அவருடைய பேச்சைக் கேட்காததால் அனுபவிக்கிறோம்.

கேள்வி: மதுரையிலே ஆளுங்கட்சி மீது அதிக வழக்குகளை போலீஸ் கமிஷனரும், சூப்பிரண்டும் பதிவு செய்திருக்கிறார்களே?

பதில்: ஆட்சிகள் வரும், மீண்டும் திரும்பவும் வரும். நம்புங்கள்.

கேள்வி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். தேர்தல் ஆணையம் அவ்வாறு நடக்க என்ன தேவை?

பதில்: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக இருப்பதாக நான் சொல்லவில்லை. இரண்டு மூன்று குறிப்புகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதற்காக சொன்னேன். அதை வைத்துக் கொண்டு நீங்களே பாரபட்சம் என்று சொன்னால்?

கேள்வி: எதிர் முகாமிலே தேர்தல் ஆணையம் முறையாக நடப்பதாகச் சொல்கிறார்களே?

பதில்: அதில் இருந்தே தெரிந்து கொள்ளுங்களேன். எதிர் முகாம் தேர்தல் ஆணையம் முறையாகச் செயல்படுகிறது என்று பாராட்டுகிறது என்றால், அதற்கு என்ன அர்த்தம்?

கேள்வி: மதுரையை மையப்படுத்தியே குறிவைத்தே தேர்தல் ஆணையம் நெருக்கடி பண்ணுவதைப் போல பல குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்களே?

பதில்: தேர்தல் ஆணையத்தை நான் இதைவிட அதிகமாக பகிரங்கமாக குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. இதுவரை நான் கூறிய குறிப்புகளிலிருந்து நீங்கள் புரிந்து கொண்டால் சரி.

தேர்தல் முடிவுகள்

கேள்வி: தமிழகத் தேர்தல் முடிவுகள் மத்தியிலே எதிரொலிக்குமா?

பதில்: எதிரொலிக்கும்.

கேள்வி: எப்படி?

பதில்: எதிரொலிக்கும்போது தெரியும்.

கேள்வி: இலவச திட்டங்களுக்கு உங்கள் பிரசாரத்தின்போது மக்கள் எப்படிப்பட்ட வரவேற்பினை தருகிறார்கள்?

பதில்: நாங்கள் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள். ஏனென்றால் ஏற்கனவே நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லி, அதைச் செய்து, அதை மக்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நம்புகிறார்கள். சில பேர் நாங்கள் சொல்வதை காப்பியடித்து, ஜெராக்ஸ் எடுத்து- படித்திருக்கிறார்கள். அதை எப்படி மக்கள் நம்புவார்கள் என்று எனக்குத் தெரியாது. எங்களுடைய தேர்தல் அறிக்கையில் இணைக்கப்பட வேண்டியவைகள் சில உண்டு. என்னிடத்திலே இடைக்காலத்தில் சிலர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தேர்தல் அறிக்கையில் இருப்பதாக நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.

இந்து மதத்தினர் தங்களுக்குச் சொந்தமான இடத்திலோ அரசு புறம்போக்கு இடத்திலோ தங்களின் வழிபாட்டு தலங்களை கட்ட விரும்பினால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக் கட்டி வருவதைப்போல கிறித்தவ, இஸ்லாமிய மதத்தினரும் தங்களின் வழிபாட்டு தலங்களை நிறுவ விரும்பினால், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதியினைப் பெற்று கட்டிடம் கட்டுவதைப் பற்றி அரசு பரிவோடு பரிசீலிக்கும்.

மதுரைக்கு அருகில் உள்ள யானைமலையை மத்திய அரசின் தொல்லியல் துறை எடுத்துக்கொள்ளப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வந்த போது -இதைப் பற்றி வைகோ போன்றவர்கள் அறிக்கை விடுத்தார்கள் தமிழக அரசு அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை என்று மறுத்திருக்கிறோம். அந்த மலையைச் சுற்றி பத்துக்கு மேற்பட்ட கிராமங்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இருப்பதை நான் நன்றாக அறிவேன். அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராத வகையில், அந்த இடத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் கழக அரசு ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: தமிழகத்தில் ஆங்காங்கு பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?

பதில்: எந்தப் பணமும் யாருடையது, எந்தக் கட்சியின் பணம் என்று அறிவிக்கவில்லையே?

கேள்வி: மேற்கு வங்கத்தில் ஐந்தாறு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்திலே ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆனாலும் இங்கே சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்களே?

பதில்: எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. சில பத்திரிகைகள் தான் சரியாக இல்லை என்று செய்திகள் வெளியிடுகின்றன.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+