தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை குழப்பும் வகையில் கட்சிகள் செயல்படக் கூடாது-உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் மரியாதை, மதிப்புமிக்க நிலையை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் கட்சிகள், அறிக்கைகள் விடுவதன் மூலம் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,

தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நிலையில் சில குற்றங்களை தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை குறைசொல்லி முதல்வர் கருணாநிதியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பேசுகின்றனர்.

இப்படிப்பட்ட பதவியில் இருப்பவர்கள், அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் தேர்தல் கமிஷன் போன்ற துறையை விமர்சிப்பதற்கு பயன்படுத்தும் வார்த்தைகள், அந்த துறையை கேவலப்படுத்தும் விதத்தில் இருக்கக் கூடாது. முதல்வரும், மத்திய அமைச்சரும் மற்ற துறைகளை மதிக்க வேண்டும். மிரட்டும் தொனியில் பேசக்கூடாது.

தேர்தல் கமிஷன் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள், தேர்தல் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மீட்டெடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 31-ந் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி, தமிழகத்தில் நடக்கிறது' என்று பேசி இருக்கிறார். சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் அந்த குற்றச்சாட்டுகளை பின்தொடர்ந்து கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் கமிஷன் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் தேர்தலை சுதந்திரமாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷனுக்கு தடையாக உள்ளன.

தேர்தல் கமிஷன் ஒரு தலைப்பட்சமாகவும், ஒரு சார்பாகவும் நடந்து கொள்கிறதென்று முதல்வரும், மத்திய அமைச்சரும் பேசுவதால் அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும், மக்களிடம் அதே கருத்தை சொல்வது தேர்தல் கமிஷனின் சுதந்திரத்தையும், சுயாட்சியையும், அதிகாரத்தையும் பாதிப்பதாக உள்ளது.

தேர்தல் கமிஷனின் பணியாளர்களான கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட மற்ற அதிகாரிகளின் பணியை தி.மு.க.வினரின் இந்த பேச்சு பாதிப்பதாக உள்ளது. எனவே கருணாநிதி, ப.சிதம்பரம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் ஆகியோர் தேர்தல் கமிஷன் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்ஜிஆர் பிரசாத் கூறுகையில்,

இவர்கள் மிகக் கடுமையாக குற்றம்சாட்டி வருவதால் குறைந்தபட்சம் ஒரு உத்தரவை கோர்ட் பிறப்பிக்க வேண்டும். அதன் மூலம் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, முதல்வரின் பேச்சு தொடர்பாக தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது. எனவே அதை மறந்துவிட வேண்டியதுதானே என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த பிரசாத், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு இடையே முரண்பாடு, கருத்து வேறுபாடு வரும் நிலையில் அதை தீர்ப்பதற்கு கண்டிப்பாக ஒரு நடைமுறை இருக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

இவர்களின் பேச்சால் தேர்தல் கமிஷனின் நடுநிலை பாதிப்படைகிறது. பைக்குள் இருக்கும் பத்து ரூபாயையும் பறித்து விடுகிறார்கள் என்றும், அதிகாரத்தை எல்லை கடந்து பயன்படுத்துவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது.

உள்ளாட்சி தேர்தலின் போது உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அப்போது பேசிய அமைச்சர், இங்கு முதல்வர் ஆட்சி செய்கிறாரா? அல்லது தலைமை நீதிபதி ஆட்சி செய்கிறாரா?' என்று பேசினார். நீதித்துறை அதிகார எல்லை கடந்து செயல்படுவதாக ஒருவர் கூறினால் நீங்கள் அதுபற்றி கேட்கமாட்டீர்களா? என்றார்.

இதையடுத்துப் பேசிய தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் போல, தேர்தல் கமிஷனும் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே என்று சுட்டிக் காட்டினார்.

அப்போது முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம் கூறுகையில், இவர்கள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை மட்டுமே குற்றம் சாட்டி கோர்ட்டுக்கு வந்திருக்கிறார்கள், அதைப் பார்க்கும் போது, கோர்ட்டின் சில உத்தரவுகளை பெற்று அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி வெளிப்படையாக தெரிகிறது. அதை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துவார்கள். இது அவர்களின் அரசியல் திட்டம். இப்படிப்பட்ட வழக்குகளை கோர்ட்டு ஏற்கக்கூடாது என்று கோரினார்.

பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். அவர்கள் கூறுகையில்,

தமிழகத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் மரியாதை, மதிப்புமிக்க நிலையை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் கட்சிகள், அறிக்கைகள் விடுவதன் மூலம் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கக் கூடாது.

13-ந் தேதி நடக்கும் தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதற்காக, மத்திய அரசு, அரசியல் கட்சிகள், வழக்கின் பிரதிவாதிகள், தேர்தல் கமிஷன் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைப்பாக செயல்படுவார்கள் என்று இந்த கோர்ட் நம்புகிறது.

இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குள் நாங்கள் போகவில்லை. எனவே இந்த விவகாரத்தை, தனிப்பட்ட விளம்பரம் பெறுவதற்கான வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறி மனுவை பைசல் செய்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+