வடிவேலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 அதிமுகவினர் கைது: தொடர் விசாரணை
துடியலூர்: நடிகர் வடிவேலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த 2 அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சாலிகிராமம் வேதவல்லி தெருவில் நடிகர் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 1/2 மணியளவில் அலுவலகத்தில் இருந்த வடிவேலுவின் மேனேஜர் முத்தையாவின் செல்போனுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் பிரசாரத்தில் வடிவேலு பேசுவது சரியில்லை என்றும், அதனால் அவரது பிரசார வாகனத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்போவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இது குறித்து சென்னை சைபர் கிரைம் தனிப்பிரிவு போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் அந்த எண் கோவையில் உள்ள ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் தனிப்பிரிவு போலீசார் நேற்று மாலை கோவைக்கு விரைந்தனர். அந்த நபரிடம் விசாரித்ததில் அந்த சிம்கார்டை கடந்த சில மாதங்களுக்கு முன் 2 அதிமுகவினர் தன்னிடம் இருந்து வாங்கிக் கொண்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து கவுண்டம்பாளையத்தில் வைத்து அந்த 2 அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அமுல்கந்தசாமி (40) மற்றும் கண்ணப்பநகரை சேர்ந்த கருப்பசாமி (40) என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் இரவோடு இரவாக சென்னைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications