இந்துக்கள் புனித யாத்திரைக்கு நிதியுதவி-ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணி பாராட்டு
சென்னை: கைலாஷ் மனோசரவோர் யாத்திரை சென்று வர இந்துக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கும், கிறிஸ்தவர்களுக்கு இஸ்ரேல் சென்று வரவும், இந்துக்கள் சீனாவில் உள்ள கைலாஷ் யாத்திரைக்குச் சென்று வரவும் நிதி உதவி வழங்கப்படும் என்று தேர்தல் கூட்டத்தில் பேசியுள்ளார்.
இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான கைலாஷ் மனோசரவோர் யாத்திரைக்கு நிதி உதவி அளிக்க அறிவிப்பு செய்துள்ள அவரை இந்து முன்னணி பாராட்டுகிறது.
அதே சமயம் கைலாஷ் யாத்திரைக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதையும் கவனிக்க வேண்டும். லட்சக்கணக்கில் செலவாவதுடன், ஆரோக்கியமானவர்கள்தான் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியும்.
இந்தச் சலுகையோடு, இந்துக்கள் மிகப் புனிதமாக கருதும் காசி-இராமேஸ்வரம் யாத்திரை, ஜோதிர்லிங்க தல யாத்திரை, சக்திதல யாத்திரை போன்றவற்றுக்கும், கிரிவலம் சென்று வரவும், கோயில் விழாக் காலங்களுக்கு விடப்படும் அரசு பேருந்துகளில் சலுகைகள் வழங்கவும் உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications