கல்யாண தீர்த்ததில் வசித்து வந்த 106 வயது பெண் சாது மரணம்
பாபநாசம்: பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாண தீர்த்தத்தில் வசித்து வந்த சாது கிருஷ்ணவேணி அம்மாள் நேற்று காலமானார். அவரது உடலை கல்யாண தீர்த்தம் அருகே அடக்கம் செய்ய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி அம்மாள். இளம் வயதிலேயே ஆன்மிகம் மற்றும் துறவறத்தில் ஈடுபாடு கொண்ட அவர் தனது குடும்பத்தினருடன் கல்கத்தா காளி கோயிலுக்கு சென்றார். பின்னர் அவர் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பல்வேறு ஊர்களுக்கு தன்னந்தனியாகச் சென்றுள்ளார். பல ஆண்டுகள் கழித்து கடந்த 1962-ம் ஆண்டில் தனது 53-வது வயதில் பாபநாசம் அகஸ்தியர் கோயிலுக்கு வந்துள்ளார்.
அப்போது மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த அகஸ்தியர் அருவி மேல் பகுதியில் கல்யாணதீர்த்த அருவி அருகிலுள்ள குகை ஒன்றில் தனியாகத் தங்கி இறைவனை வழிபட்டு வந்தார். பாதையில்லாத பகுதியில் பெண் ஒருவர் தனியாக இறை வழிபாடு செய்வது பற்றி அறிந்த மக்கள் அவரை ஆவலுடன் பார்த்து வணங்கி வந்தனர்.
நாளடைவில் கிருஷ்ணவேணி அம்மாளின் முயற்சியால் கல்யாண தீர்த்தத்திற்கு நடந்து செல்ல படி வசதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சிவன், லோகநாயகி, சிவதுர்க்கை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பூஜையும், அன்னதானமும் செய்ய ஏற்பாடு செய்தார். இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் கல்யாண தீர்த்த ஸ்தலத்தின் பெருமை பரவியது. இதையடுத்து ஆன்மிகவாதிகள், தொழிலதிபர்கள் கல்யாண தீர்த்தத்திற்கு வந்து சாது கிருஷ்ணவேணி அம்மாளை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிச் செல்லும் வழக்கம் ஏற்பட்டது.
அந்த அம்மாளுக்கு தமிழ், தெலுங்கு, மராட்டியம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகள் தெரியும். ஆயினும் அவர் யாருடனும் அதிகமாக பேசமாட்டார். கடந்த 10 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சித்ரா பவுர்ணமி நாளான நேற்று காலை தனது 106-வது வயதில் சிவலோகப் பதவி அடைந்தார். அவரது அடக்கம் கல்யாண தீர்த்தத்தில் இன்று நடக்கிறது. அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகளை திருச்சியில் உள்ள டிரஸ்டை சேர்ந்த ராஜ்குமார் சுவாமிகள், பாஜக நகர செயலாளர் கோபால் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். சாது கிருஷ்ணவேனியின் உடலை அங்கேயே அடக்கம் செய்யலாமா அல்லது தகனம் செய்யலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு மாதாந்திர பவுர்ணமி வழிபாட்டு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்யாண தீர்த்தம் பகுதி அகஸ்தியருக்கு சிவன் கல்யாண கோலத்தில் காட்சியளித்த புண்ணிய ஸ்தலம் என்பதால் அப்பகுதியில் அடக்கம் அல்லது தகனம் செய்யக் கூடாது என்று சிங்கை போலீசில் அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications