மே 10 வரை ஜெயலலிதா-சசிகலா கொடநாட்டில் 'டேரா'!
ஊட்டி: கொடநாடு வந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மே 10ம் தேதி வரை அங்கேயே தோழி சசிகலாவுடன் தங்கியிருப்பார் என்று தெரிகிறது. மே 13ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை பெரும்பாலும் கொடநாடுஎஸ்டேட்டிலேயே தங்கியிருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் தேர்தலையொட்டி சென்னை வந்தனர்.
இப்போது மீண்டும் கொடநாடு வந்துவிட்டனர். நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை கோவை வந்த அவர்கள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 1.30 மணிக்கு கொடநாடு எஸ்டேட் வந்தனர்.
ஹெலிகாப்டரிலிருந்து இறங்கியதும் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மூலம் எஸ்டேட்டின் பிரதான வாயிற்கதவுக்கு வந்த அவர்களை அங்கு காத்திருந்த அதிமுகவினர் சால்வைகள் மற்றும் மலர்க் கொத்துகள் தந்து வரவேற்றனர்.
வரவேற்க வந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்:
முன்னாள் அமைச்சர்கள் அ.மில்லர், ஏ.கே.செல்வராஜ், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜ், உதகை தொகுதி அதிமுக வேட்பாளர் புத்திசந்திரன், குன்னூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெள்ளி, கோவை தெற்கு வேட்பாளர் சேலஞ்சர் துரை, உதகை நகரச் செயலர் தேவராஜ், ஈரோடு மாவட்ட முன்னாள் செயலர் சிந்து ரவிச்சந்திரன், வெலிங்டன் பாளைய வாரிய துணைத் தலைவர் பாரதியார் ஆகியோருடன் நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பத்மநாபன், ராஜா தங்கவேல், ஜெயசீலன், நெடுகுளா ஊராட்சித் தலைவர் ஜெயந்தி மாதன், மகளிரணியைச் சேர்ந்த சத்தியபாமா உள்ளிட்டோர் ஜெயலலிதா சசிகலாவை வரவேற்றனர்.ஏராளமானோர் பங்கேற்றனர்.
கொடநாட்டில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மே மாதம் 10ம் தேதி வரை தங்கியிருப்பார் என்று தெரிகிறது.
பிறந்தநாள் பரிசு வழக்கு-ஜெ நேரில் ஆஜராக தேவையில்லை:
ஜெயலலிதா கடந்த 1992ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலைகள் மற்றும் காசோலைகளை தனது சொந்த வங்கி கணக்கில் சேர்த்து கொண்டார். அரசு பதவியில் இருந்த ஜெயலலிதா இந்த தொகையை தனது சொந்த வங்கி கணக்கில் சேர்த்து கொண்டது ஊழல் தடுப்பு சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி அவர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தி்ல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகிய 3 பேரும் சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை கடந்த 12ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அத்துடன் வரும் மே 11ம் தேதி இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக 3 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சி.பி.ஐ. கோர்ட்டில் மே 11ம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று 2 மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்திருந்தார்.
மேலும், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து சி.பி.ஐ. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனுக்களை நீதிபதி கே.என். பாட்ஷா இன்று விசாரித்தார்.
அப்போது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் சி.பி.ஐ. நீதிமன்ற்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மேலும், வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சி.பி.ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் ஜுன் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தள்ளிவைப்பு:
இந் நிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மொழிபெயர்பாளர் திருத்திய தவறுகளையும், மொழிப்பெயர்ப்பையும், நீதிமன்ற ஊழியர்கள் சரிபார்த்து ஏப்ரல் 26ம் தேதி தாக்கல் செய்யுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மொழிப்பெயர்ப்பில் காணப்படும் பிழைகளை திருத்தியமைக்க தனி நீதிமன்றம் 25 நாள்கள் கால அவகாசம் அளித்திருந்தது. அதன்படி, மொத்தமுள்ள 259 சாட்சியங்களில் 55 சாட்சிகளின் வாக்குமூலங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்ததில் பிழை இருப்பதாக ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அசல் மற்றும் பிழைகள் அடங்கிய பட்டியல் இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்து திருத்தும்படி மொழிப்பெயர்ப்பாளர் ஹரீஷிக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி திருத்திய மொழிபெயர்ப்பை ஹரீஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மொழி பெயர்ப்பில் இருந்த தவறுகளையும், அதில் திருத்தம் செய்யப்பட்ட இடங்களையும் சரிபார்த்து பின்னர் அதனை வரிசையாக சிவப்பு மையால் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று நீதிமன்ற ஊழியர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 26க்கு தள்ளிவைத்தார்.
மேலும் மொழிபெயர்ப்பு செய்ய அதிக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications