ரூ. 19 கோடி பங்களாவை ரூ. 6.5 லட்சமாக கணக்கு காட்டிய சாந்தி பூஷண்
டெல்லி: அன்னா ஹசாரே தலைமையிலான லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள சட்ட வல்லுனர் சாந்தி பூஷணுக்கு எதிராக இன்னொரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலகாபாத் நகரில் உள்ள தனது ரூ. 19 கோடி மதிப்புள்ள பங்களாவை வெறும் ரூ. 6.5 லட்சம் பெருமானதாகக் காட்டி ரூ. 1.3 கோடி அளவுக்கு 'ஸ்டாம்ப் டூட்டி வரி' கட்டாமல் அரசை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
இந்த அழகில் இவரும் இவரது மகன் பிரசாந்த் பூஷணும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் சிடி விவகாரத்தில் மாட்டினார் சாந்தி பூஷண். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை என் மகன் பிரசாந்த் நினைத்தால் ரூ. 4 கோடிக்கு விலைக்கு வாங்கி தீர்ப்பையே மாற்றுவான் என்று இவர் பேசிய பேச்சு அடங்கியதாகக் கூறப்படும் ஆடியோ சிடி வெளியானது.
அடுத்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் முதல்வர் மாயாவதியின் கோட்டாவில் 10,000 சதுர அடி பண்ணை வீட்டுக்கான நிலத்தை முறைகேடாகப் பெற்றதாக புகார் எழுந்தது.
இந் நிலையில் அலகாபாத் வீட்டின் மதிப்பை குறைத்துக் காட்டி உரிய வரி கட்டாமல் அரசை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பூஷணுக்கு உத்தரப் பிரதேச அரசு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான சாந்தி பூஷண், லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் இடம்பெறக்கூடாது என்ற குரல் ஓங்கி வருகிறது.
சிடி உண்மையானதே-ஆய்வு மையம்:
இந் நிலையில் காசு கொடுத்தால் நீதிபதிகளை விலைக்கு வாங்கலாம் என்று சாந்தி பூஷண் பேசியதாக வெளியான சிடி உண்மையானது தான் என அதைப் பரிசோதித்த மத்திய அரசின் ஆய்வு மையமான Central Forensic Science Laboratory (CFSL) தெரிவித்துள்ளது.
திக்விஜய் சிங்குக்கு சாந்தி பூஷண் நோட்டீஸ்:
இந் நிலையில் அலகாபாத் வீடு-ஸ்டாம்ப் டூட்டி மோசடி தொடர்பாக பூஷண் மீது குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பூஷண் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸின் நகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
சந்தோஷ் ஹெக்டே-திக்விஜய் சந்தேகம்:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய திக்விஜய் சிங், கர்நாடக லோக் ஆயுக்தா பிரிவு நீதிபதியான சந்தோஷ் ஹெக்டே லோக் பால் குழுவில் உள்ளார். ஆனால், கர்நாடகத்திலேயே லஞ்ச-ஊழலை ஒழிக்க முடியாத இவரால் எப்படி நாட்டில் லஞ்ச-ஊழலை ஒழித்துவிட முடியும்.
அதே போல பாபா ராம்தேவ் முதலில் தனது யோகா வேலையை ஒழுங்காகக் பார்க்கட்டும். அதைவிட்டுவிட்டு கருப்புப் பணம் குறித்து அவர் பேசுவதாக இருந்தால், அவரது அறக்கட்டளைக்கு கடந்த சில ஆண்டுகளில் வந்துள்ள ரூ. 11,000 கோடி பணத்தில் எவ்வளவு கருப்புப் பணமும் அடக்கம் என்பதை விளக்கட்டும் என்றார்.
ஹஸாரேவுக்கு சோனியா பதில்:
இதற்கிடையே தான் ஒருபோதும் அவதூறு பிரசாரத்தை ஊக்குவித்ததில்லை என்று அன்னா ஹசாரேவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை சோனியா காந்திக்கு ஹசாரே எழுதிய கடிதத்தில், லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் சில காங்கிரசாரும் அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுரை கூறுமாறும், இவ்வாறு உறுப்பினர்களைக் களங்கப்படுத்தும் பிரசாரம், மசோதா உருவாக்கும் நோக்கத்தையே சிதைத்து விடும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து சோனியா காந்தி எழுதிய கடிதத்தில், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள நான், இது தொடர்பாக விவாதிப்பதற்கு ஒரு செயல்குழுவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இக்குழு சில விதிமுறைகளை வகுத்து வருவதாகவும், இது குறித்து ஏப்ரல் 28ம் தேதி நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
எந்த கால கட்டத்திலும் அரசியல்வாதிகளோ, அமைச்சர்களோ மேற்கொள்ளும் அவதூறு பிரசாரத்தை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். லோக்பால் அமைப்பு மிகவும் உறுதியானதாகவும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் உயரிய குறிக்கோளுடன் செயல்படும் சுயாட்சி அமைப்பாக உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.
லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசர அவசியமானதாகும். இந்த விஷயத்தில் எனது உறுதிப்பாட்டை சந்தேகிக்க வேண்டாம் என்று சோனியா காந்தி அக்கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications