சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்
விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல் கருகி இறந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியை அடுத்த நதிக்குடியைச் சேர்ந்த கனகவேல் என்பவருக்கு அப்பகுதியில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. 100 அறைகள் உள்ள இந்த ஆலையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு மருந்து கலக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசுகள் உராய்ந்ததில் தீப்பொறிகள் பறந்தன. இது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பட்டு தீப்பிடித்தது. இதையடுத்து அங்குள்ள பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
அருகில் இருந்த 6 அறைகளுக்கும் தீப்பரவியது. உடனே சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் உடல் கருகி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும், 5 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு போராடிய 5 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஒருவர் உயிர் இழந்தார். மற்ற 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications