தமிழகம் முழுவதும் பாமக நிர்வாகிகள் கூண்டோடு டிஸ்மிஸ்?
சென்னை: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த பாமக மாவட்ட செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலின்போது திமுகவினருடன் ஒத்துழைத்து செயல்படவில்லை என்று திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, டாக்டர் ராமதாஸிடம் தனிப்பட்ட முறையில் வேதனை தெரிவித்ததைத் தொடர்ந்து அத்தனை பேரையும் டாக்டர் ராமதாஸ் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும், 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என்றும் மாவட்டத்திற்கு ஒரு மாநில துணைப்பொதுச்செயலர் என்றும் நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வந்தது பாமக.
இதே போல் மாணவர் அணி, விவசாய அணி என்று ஒரு மாவட்டத்திற்கு 52 செயலாளர்கள் வீதம் 30 மாவட்டங்களில் 1560 மாவட்டச் செயலர்கள் இருந்தனர்.
சட்டசபைத் தேர்தலில் 18 எம்.எல்.ஏக்களில் 7 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர். மேலும், பெரும்பாலான வேட்பாளர்கள் குறித்து பாமகவினரும் கடும் அதிருப்தியுடன் இருந்தனர்.
இதன் காரணமாக தேர்தல் பணியில் அவர்கள் சுணக்கம் காட்டினர். மேலும் திமுகவினருடன் இணைந்தும் அவர்கள் பணியாற்றவில்லை. இதனால் அந்தத் தொகுதிகளில் எதிர்க்கட்சிக் கூட்டணியினர் மிகவும் உற்சாகத்துடன் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
பாமகவினரின் இந்தப் போக்கு குறித்து கட்சித் தலைவர்களான டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் புகார்கள் போனது. அதேபோல முதல்வர் கருணாநிதியிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றனர் திமுகவினர்.
இதையடுத்து சமீபத்தில் தன்னை சந்தித்த ராமதாஸிடம் இதுகுறித்து தெரிவித்து வேதனைப்பட்டார் முதல்வர் கருணாநிதி.
இதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் அதிரடியாக செயல்பட்டு அத்தனை பேரையும் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மாவட்ட செயலாளர்களின் பொறுப்புகள் அனைத்தும், மாநில துணைப் பொதுச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுக்குப் பின்னர் இந்த நீக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications