யார் இந்த ஒசாமா பின் லேடன்?-ஒரு பார்வை

சிறு வயது முதலே இஸ்லாமிய மதக் கோட்பாடுகள் மீது தீவிரப் பற்றுடன் இருந்தவர் பின்லேடன். இளம் வயதில் அவரது பாதை வேறு மார்க்கமாக திரும்பியது. தீவிரவாதப் பாதைக்குத் திரும்பிய அவர் தீவிரவாத அமைப்புகளுக்கும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கும் பணம் கொடுத்து உதவத் தொடங்கினார்.
பின்னர் 1988-ம் ஆண்டு அவர் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பைத் தொடங்கினார் பின்லேடன். இதன் காரணமாக அவரது சவூதி குடியுரிமை பறிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார்.
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் உலகத்தையே உலுக்கினார். அன்று முதல் அமெரிக்கர்கள் உலகின் மிக மோசமான தீவிரவாதியாக பார்க்கத் துவங்கினர். அவர் அமெரிக்காவின் எதிரி ஆனார்.
இரட்டைத் தாக்குதல்கள் நடந்த 6-வது நாள் ஒரு நிருபர் அதிபர் புஷ்ஷிடம் நீங்கள் ஒசாமா இறக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு புஷ் எனக்கு அவர் வேண்டும், நீதி வேண்டும் என்றார்.
பின்லேடனை வேட்டையாட அமெரிக்கப் படைகள் கடுமையாகப் போராடி வந்தன. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டபடி ஆப்கானிஸ்தானையே சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தனர். இருப்பினும் லேடனின் நிழல் கூட அவர்களுக்குக் கிட்டவில்லை. இருந்தும் தொடர்ந்து முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு, பாகிஸ்தானில்தான் லேடன் பதுங்கியிருப்பதாக சந்தேகம் வலுத்தது. இருப்பினும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒத்துழைப்பு சரியாக இல்லாததால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஒசாமாவைக் கொல்ல அமெரிக்கப் படைகளுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இறுதியாக பாகிஸ்தானில் வைத்தே லேடன் கொல்லப்பட்டார். பின் லேடனும், அவரது கூட்டாளிகளும் ஆரம்பத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள டோரா-போரா மலையில் பதுங்கியிருந்தாதக கருதப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியான வசிரிஸ்தானுக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்பட்டது.
இடையில் கராச்சியில் அவர் சிகிச்சை பெற்றதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் தற்போதோ, பாகிஸ்தான் தலைநகருக்கு அருகே பின்லேடன் பதுங்கியிருந்தது தெரிய வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இஸ்லாமிய உலகத்தில் பலரால் மாபெரும் ஹீரோவாக பார்க்கப்பட்ட போதிலும், இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின் லேடன் சம்பாதிக்கத் தவறவில்லை. உலக தீவிரவாதத்தின் வட நட்சத்திரம் என்று அவரை அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்தது. ஆங்காங்கே இருந்த தீவிவாத அமைப்புகளை எல்லாம் அல் கொய்தாவுடன் இணைத்தார் ஒசாமா. எகிப்து-செசன்யா, ஏமன், பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத அமைப்புகளை அல் கொய்தா அமைப்பின் கீழ் கொண்டு வந்தார்.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்களையும், அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டவர்களையும் பாதுகாக்க பின் லேடன் பணம் கொடுத்தார். அல் கொய்தா மூலம் உலகம் முழுவதும் புனிதப் போர் என்ற பெயரில் தீவிரவாதத்தையே அரங்கேற்றினார் பின்லேடன். இவரது அமைப்பால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சில ஆண்டுகள் பின் லேடன் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். அல் கொய்தா அமைப்பு அமெரிக்காவைக் குறி வைத்து பல்வேறு நாடுகளில் அமெரிக்க இடங்களை, நிலைகளைத் தாக்கியது.
பின் லேடனின் உண்மையான அதிகாரம் எவ்வளவு என்றே தெரியவில்லை. அல் கொய்தாவில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை நாடுகளில் அது ஊடுருவியிருக்கிறது, பின் லேடன் கூறியதுபோல அவர்களிடம் ரசாயண, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை.
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த சமயத்தில் பேக்ஸ் மூலமும், வீடியோ, ஆடியோ மூலமும் செய்திகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து தனது இயக்கத்தை நடத்தி வந்தார் பின்லேடன்.
கோடீஸ்வரருக்கு மகனாக பிறந்த அவர் ராஜ வாழ்க்கை வாழாமல் அமெரிக்க எதிர்ப்பு, அமெரிக்க அழிப்பு என்ற கொள்கையுடன் தீவிரவாத களத்தில் குதித்தார். அவர் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றுவதாக தெரிவித்தாலும், அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிப்பதன் மூலம் அவர் மார்க்கத்திற்கு எதிராக செயல்படுவதாக சில அறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் அல் கொய்தாவின் தாக்குதல்களில் இஸ்லாமியர்களும் பெருமளவில் பலியாகியுள்ளனர். எனவே இஸ்லாமியர்களின் வெறுப்பையும் பின்லேடன் சம்பாதித்தார்.
இஸ்லாம் வகுத்துள்ள புனிதப் போர் என்ற வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியவர் பின்லேடன் என்பது இஸ்லாமியர்கள் பலரின் கருத்தாக உள்ளது.
லேடன் கடந்த 1997-ம் ஆண்டு சிஎன்என்-க்கு கொடுத்த பேட்டின்போது கூறுகையில்,
அமெரிக்கா நம் நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள நினைக்கிறது, நமது வளங்களை கொள்ளையடிக்க நினைக்கிறது, அதன் ஏஜெண்டுகள் தான் நம்மை ஆள வேண்டும் என்று திட்டமிடுகிறது. இத்தனைக்கும் நம்மை சம்மதிக்க வைக்கப் பார்க்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், உடனே நம்மை தீவிரவாதிகள் என்று கூறுகிறது.
பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேல் குடியிருப்பு பகுதியில் கல் எறிந்தால் அவர்களை அமெரிக்கா தீவிரவாதிகள் என்கிறது. லெபனானில் உள்ள ஐ.நா கட்டிடத்தில் குழந்தைகளும், பெண்களும் இருக்கையில் இஸ்ரேல் அதை குண்டு வைத்து தகர்த்தால் அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே சமயம் உரிமைக்காக குரல் கொடுக்கும் எந்த முஸ்லீமிற்கும் கண்டனம் தெரிவிக்கிறது. எங்கு பார்த்தாலும் அமெரிக்கா தான் தீவரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக இருக்கிறது என்றார்.
எப்படியோ, உலகையே ஆட்டிப் படைத்த மிகப் பெரிய நபராக மாறிப் போய் விட்டார் பின்லேடன். அவரது சகாப்தமும் இன்று முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications