கோவையை சுற்றிய வனப் பகுதிகளில் புலிகள்-வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

கோவையைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் புலிகள் - வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
கோவை: கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலத்திற்குப் பின் புலிகளின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழக காப்பகங்கள்
வடமாநிலங்களை விட தென்மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சமீபத்தில் மத்திய அரசின் வனத்துறை அறிவித்திருந்தது. ஆனைமலை, முதுமலை மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதிகளிலும் புலிகள் நடமாட்டம் அடிக்கடி இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். சத்தியமங்கலம் வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க வனத்துறை முயற்சிகள் எடுத்து வருகின்றன.
கோவை வனக்கோட்டம்
இந்நிலையில், கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் கடந்த மார்ச் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வன உயிரினக் கணக்கெடுப்பு துவங்கியது. ஆச்சர்யமாக காரமடையில் 3 இடங்களிலும், மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதிகளில் 2 இடங்களிலும் புலிகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.
புலிகள் நடமாட்டம்
புலிகள் நடமாட்டம் இருப்பதாக யூகிக்கின்ற இடங்களில் 'காமிரா டிராப்" கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. காரமடை வனச்சரகத்தில் வைக்கப்படிருந்த காமிரா டிராப்பில் ஏப்ரல் 17ம்தேதி புலி ஒன்றின் போட்டோ பதிவாகியுள்ளது.
வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி
கோவை வனச்சரகத்தில் இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் தற்போதுதான் முதன்முறையாக புலிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலால் கோவையிலுள்ள வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் இதனால் வனங்களையும், பிற விலங்குகளையும், அரிய மரங்களையும் காப்பாற்ற முடியும் என்பதே இவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம்.












Click it and Unblock the Notifications