மத்திய அரசின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்-ராம்தேவுக்கு அன்னா எச்சரிக்கை
ராலேகான் சித்தி (மகாராஷ்டிரா): மத்திய அரசு மோசடி வேலையில் ஈடுபடுகிறது. இதை யோகி பாபா ராம்தேவ் உணர்ந்து உஷாராக இருக்க வேண்டும் என்று காந்தியவாதி அன்னா ஹஸாரே எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தி என்ற இடத்தில் அன்னா ஹஸாரே பேசுகையில், பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு கொள்ள முடிவு செய்துள்ளேன். அதேசமயம், மத்திய அரசிடம் ராம்தேவ் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
முதலில் ராம்தேவின் கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்த மத்திய அரசு பின்னர் பல்டி அடித்து மோசடி செய்ய முயற்சிக்கிறது.
ஊழலை எதிர்த்துப் போராடும் அனைவருமே அரசு வாய்மொழியாக தரும் எந்த உறுதிமொழியையும் நம்பக் கூடாது, ஏற்கக் கூடாது. அப்படி செய்தால் நாம் ஏமாந்து விடுவோம்.
ராம்தேவ் டெல்லியில் தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன். ஊழலுக்கு எதிரான போரில் நமக்குள் எந்தப் பிரிவினையும் கிடையாது. எந்தப் பூசலும் கிடையாது.
ராம்தேவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இருவரும் இணைந்து போராட்டத்தைத் தொடங்கப் போகிறோம். தொடர்ந்து இருவரும் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம் என்றார் அன்னா.


Click it and Unblock the Notifications
