புதுச்சேரியில் 4 அமைச்சர்கள் பதவியேற்பு-இழுபறி முடிந்தது
புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட இழுபறியில் இருந்து வந்த அமைச்சரவை அமைக்கும் பணிகள் இன்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தன. நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வென்றன. ஒரு இடத்தை திமுக ஆதரவு சுயேச்சை வென்றார். மீதமுள்ள 9 இடங்களில் மட்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்றது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே அங்கு பெரும் பிரளயம் வெடித்தது. முதல்வராகப் பதவியேற்ற என்.ரங்கசாமி, தனித்து ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்து அதிமுகவை டென்ஷனாக்கினார். இதனால் கூட்டணி அங்கு பிளவுபட்டது.
இருப்பினும் அதிமுகவை சமாதானப்படுத்த கடுமையாக முயன்றார் ரங்கசாமி. ஆனால் அதற்குப் பலன் கிடைத்ததாக தெரியவில்லை. இந்த குளறுபடியால் அமைச்சர்கள் யாரும் நியமனம் செய்யப்படாமல் அரசு நிர்வாகம் பெரும் தேக்கத்தை சந்தித்தது.
இந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் நியமனத்தை இறுதி செய்தார் ரங்கசாமி. அமைச்சரவைப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் குண்டூசி வாங்க வேண்டும் என்றால் கூட மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். மத்திய அரசின் தயவு இல்லாமல் ஒரு புல்லைக் கூட புதுச்சேரி அரசால் பிடுங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரங்கசாமி அனுப்பிய பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதம் செய்து வந்தது. இன்று காலை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் ஆளுநர் மாளிகையில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மத்திய அரசின் தாமதத்தால் அது நடைபெறாமல் ரத்தானது.
இந்த நிலையில், பிற்பகலில் அனுமதி கொடுத்தது உள்துறை அமைச்சகம். இதையடுத்து மாலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அப்போது சந்திரகாசு, ராஜவேலு, கல்யாண சுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
நான்கு பேரின் இலாகாக்களும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களில் சந்திரகாசுவும், ராஜவேலுவும் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். மற்றவர்கள் புதியவர்கள்.
ரங்கசாமியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
முன்னதாக முதல்வர் ரங்கசாமியை, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். இதனால் காங்கிரஸ் கட்சியுடன், என்.ஆர். காங்கிரஸ் சமரசத்திற்கு முயல்கிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கிருஷ்ணசாமி, நேற்று மதியம், சட்டசபையில் உள்ள முதல்வரின் அலுவலகத்துக்கு சென்று, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அரை மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார்.
காங்கிரசில் இருந்து விலகி தனிக் கட்சி துவங்க ரங்கசாமி முடிவு செய்த போது, அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
அப்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கட்சியின் தூதராக கிருஷ்ணசாமி, ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து சமரசம் செய்ய முயன்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கிருஷ்ணசாமி மற்றும் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் இந்த சந்திப்பு புதுவை அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இருவருமே வன்னிய சமுதாயத்தினர் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications