தயாநிதி மாறன் பிரச்சினையை அவரே பார்த்துக் கொள்வார்-கருணாநிதி
சென்னை: தயாநிதி மாறனுக்கு வந்துள்ள பிரச்சினை அவரே சந்திப்பார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதன் மூலம் தயாநிதி மாறனை வேகமாக நெருங்கி வரும் சிபிஐ விசாரணை மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் திமுக தலையிடாது என்று கூறப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லேட்டஸ்டாக சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். மேலும் தனது வீட்டில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்ற சிபிஐ குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக அமைந்துள்ளது.
விரைவில் சிபிஐயின் விசாரணைக்கு தயாநிதி மாறன் அழைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. காங்கிரஸ் மேலிடத்திடம் தனக்கு உள்ள நற்பெயரைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையிலிருந்து தப்ப கடுமையாக முயன்று வருகிறார் தயாநிதி மாறன் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த வழக்கை தயாநிதிமாறனே சந்திக்கப்போவதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்றார்.
ஜெயலலிதா சொல்வது முட்டாள்தனமானது
முன்னதாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கருணாநிதி பேசுகையில்,
திமுக இனி மீண்டும் ஆட்சிக்கு வராது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது சரியல்ல. அவ்வாறு கூறுவது முட்டாள்தனமானது.
திமுக வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. அது தமிழர்களின் அடையாளம். திமுகவை யாராலும் அழிக்க முடியாது.
தேர்தலில் வெற்றி, தோல்வியை சந்திப்பது என்பது எந்த அரசியல் கட்சிக்கும் சாதாரணமானதே.
1991-ல் திமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 1996-ல் திமுக ஆட்சியை கைப்பற்றியது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (1971-ல்) 185 தொகுதிகளில் வென்ற ஒரே கட்சி திமுக தான் என்றார் அவர்.
அன்னாவை நினைத்தால் ஜேபி ஞாபகம்
இதற்கிடையே, ஊழல் ஒழிப்பு இயக்கம் குறித்து கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்னா ஹஸாரே, பாபா ராம் தேவ் போன்றவர்கள் இப்போது கறுப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிராகப் போராடி வருகின்ற இந்த நேரத்தில் என் நினைவு 1970-க்குச் செல்கிறது.
அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயணன், "பொதுவாழ்வில் இருப்போர் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும், தூய்மையைக் கெடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குரல் கொடுத்தார்.
அந்தச் சமயம் தமிழக முதல்வராக இருந்த நான் அதை வரவேற்று அறிக்கை கொடுத்தேன். 1973-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் "பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா’ திமுக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்பட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். அவருக்கு உதவியாக தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் கூடுதல் கமிஷனர்களாக நியமிக்கப்படுவார்கள்.
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுக்காலம் வரை சிறை தண்டனையும், பொய்யான குற்றம் சுமத்தப்பட்டால் சுமத்தியவர் மீது மூன்றாண்டு காலம்வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் என்றது அந்த மசோதா.
இந்த மசோதாவை எம்ஜிஆர் கருப்பு மசோதா என்று வர்ணித்தார். அப்போது ஜனசங்கத் தலைவராக இருந்த எல்.கே.அத்வானி தமிழகம் வந்தபோது, மசோதாவை வரவேற்கிறேன். விசாரணை வரம்பிற்குள் முதல்வரையும் சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதியன்று இந்த மசோதா தமிழகத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவை முழுமையாகப் படித்துப் பார்த்த ஜெயப்பிரகாஷ் நாராயண் திமுக அரசைப் பாராட்டியதோடு, தனது முழுப் புரட்சி இயக்கமான ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்தச் சட்டம் உதவி புரியும் என்றும் கூறினார்.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிப்பதற்காக திமுக ஆட்சியில் நீதிபதி வெங்கடாத்ரி நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்து அந்தச் சட்டத்தையே திரும்பப் பெற்றுவிட்டார்கள்.
லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு, உண்ணாவிரதம் என்றெல்லாம் பேசுப்படுகின்ற இந்த நேரத்தில் திமுக அரசு 1973-ஆம் ஆண்டே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications