காதல் திருமணம்..சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் கடத்தி கொலை
சென்னை: மருத்துவக் கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்த சாப்ட்வேர் என்ஜினியர் கடத்தி்ச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டார். அவரது உடல் எரிந்த நிலையில் எலும்புக் கூடாக மீட்கப்பட்டது. அவரை தனது பெற்றோர் தான் கூலிப் படையை வைத்துக் கடத்தில் கொலை செய்திருக்க வேண்டும் என்று என்ஜினியரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பார்த்தசாரதி டைடல் பார்க்கில் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார். இந் நிலையில் கடந்த 2ம் தேதி இவர் மாயமானார். இவரை போலீசார் தேடி வந்த நிலையில் திண்டிவனம் அருகே எலந்தூர் பகுதியில் தீயில் எரிந்த நிலையில் பார்த்தசாரதியின் உடல் மீட்கப்பட்டது.
இவர் காஞ்சீபுரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சரண்யாவை (25) காதல் திருமணம் செய்திருந்தார். பார்த்தசாதி கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்து கதறி அழுத சரண்யா, எனது கணவனை என் பெற்றோர் தான் திட்டம் போட்டு தீர்த்துக் கட்டி விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் முன்னதாக அவர் போலீசில் அளித்த புகாரில், எனது கணவரைக் காணவில்லை, இதன் பின்னணியில் எனது பெற்றோர் அல்லது உறவினர்கள் இருக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால், போலீசார் இவரது புகாரை பெயருக்குப் பதிவு செய்துவிட்டு, அவர் புகார் கூறிய பெற்றோரை விசாரிக்கவே இல்லை.
இந் நிலையில் தான் பார்த்தசாரதியின் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட உடல் மீட்கப்பட்டது.
இதற்கிடையே இது குறித்து பார்த்தசாரதியின் தந்தை சந்திரமோகன் கூறுகையில், எனது மகன் காணாமல் போனதும், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் நான் புகார் செய்தேன். ஆனால் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. உங்கள் மகனுக்கு கெட்ட பழக்கங்கள் இருக்கலாம். அவன் நண்பர்களுடன் வெளியில் ஊர் சுற்றுவதற்கு சென்றிருப்பான் என கூறி அவனது வங்கி கணக்கு விவரங்களை கேட்டனர்.
ஊதாரித்தனமாக செலவு செய்வதற்காக அவன் வெளியில் சென்றிருந்தால் வங்கியில் இருந்து பணத்தை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவனது வங்கி கணக்கில் பணம் அப்படியே இருந்தது. இதன் பிறகும் போலீசார் உஷாராகவில்லை.
அவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்திருந்தால் ஒரு வேளை என் மகனை மீட்டிருக்கலாம்.
அவனை திட்டமிட்டு கடத்திச் சென்றுள்ளனர். கைதேர்ந்த கூலிப்படையினரால் தான் இப்படி கொடூரமாக எரித்துக் கொலை செய்ய முடியும். எனது மறுமகளின் தந்தை உயர் பதவியில் இருக்கிறார். அவர் வழக்கு விசாரணையை திசை திருப்ப பார்க்கலாம். போலீசார் இதற்கு இடம் கொடுக்கக் கூடாது. என் மகனின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.
சரண்யாவின் தந்தை சென்னை மெட்ரோ வாட்டரில் உதவிப் பொறியாளராக உள்ளார். சரண்யா-பார்த்தசாரதி திருமணத்துக்கு சரண்யாவின் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications