Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன பாவம் செய்தது புதிய தலைமைச் செயலக கட்டடம்?-கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு என்ன பாவம் செய்தது புதிய தலைமைச் செயலக கட்டடம். என் மீது கொண்ட கோபத்தால் அந்தக் கட்டடத்தைப் புறக்கணிப்பது ஏன் என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"ஓமந்தூரார்'' எனப்படும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் - புதிய சட்டமன்ற மாளிகையும், அதையொட்டிய வளாகமும் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் "ஓமந்தூரார் வளாகம்'' எனப் பெயரிட்டு அழகுறக் கட்டிமுடிக்கப்பட்டது.

"பப்ளிக் ப்ளாசா''வில் நீண்டதொரு தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டு - நூற்றுக்கணக்கான வண்ண மீன்கள் அந்தத் தொட்டியில் நீந்தி விளையாடுவதை - அந்தப் பகுதிக்கு வரும் பள்ளிச் சிறார்களும், ஆண்களும், பெண்களும் கண்டுகளிக்கும் காட்சி அந்தக் கட்டிடத்திற்கே தனிப்பெரும் மாட்சியாக விளங்கியது.

இந்தப் பெரிய கட்டிடத்தின் எல்லாப் பணிகளுமே ஜுன் 30ந்தேதிக்குள் முடிவடையும் என்பதையும் அரசின் சார்பிலேயே அறிவிக்கப்பட்டது.

ஓமாந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகக் கட்டிடம் என்னுடைய சொந்தப் பணத்திலே கட்டப்பட்டது அல்ல. அதைக்கூட சில பத்திரிகைகளில் ரூ.1200 கோடி செலவழித்துக் கட்டப்பட்ட கட்டிடம் என்று எழுதுகிறார்கள். தற்போது கட்டி முடிந்துள்ள கட்டிடத்திற்காக திட்டமிடப்பட்ட தொகை ரூ.623 கோடியே 99 லட்சம். அதிலே செலவு செய்யப்பட்டது ரூ.479 கோடியே 50 லட்சம். கட்டப்பட்டு வருகிற பிளாக் "பி'' கட்டிடத்திற்கான மதிப்பு ரூ.279 கோடியே 56 லட்சம். இதிலே செலவாகியுள்ள தொகை ரூ.72 கோடியே 30 லட்சம். எனவே ரூ.1200 கோடி செலவழிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு!

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய ராணுவமும் இருப்பதால் பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத ஒரு நிலை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. மேலும், அங்கே உள்ள கட்டிடங்களில் ஏதாவது மாறுதல் செய்ய நேரிட்டால்கூட, - ஏன், அங்கே இருக்கும் புல்லைச் செதுக்கி அகற்றுவதற்குக் கூட - இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கிறது.

வேறு சில அரசு அலுவலகங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் இயங்கி வருவதால் அதன் காரணமாக "வாடகை'' என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு தொடர்ந்து செலவு ஏற்படுகிறது என்பதாலும்; அனைத்து அலுவலகங்களும் அமையக்கூடிய விதத்தில் புதிய இடத்தை அ.தி.மு.க. அரசு முதலில் தேடி வந்தது.

சென்னை கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா பூஜை - புனஸ்காரங்களோடு நடைபெற்று, அன்றைய முதல்வரான ஜெயலலிதாவே அதிலே கலந்து கொண்டார். சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது முடிவெடுத்தார்.

நிதி நெருக்கடி அரசுக்கு இருந்தாலும், தொலைநோக்குப் பார்வையோடு புதிய தலைமைச் செயலகத்தை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைப்போம் என அப்போது அ.தி.மு.க. அரசு தெரிவித்தது. சட்டப் பேரவையில் ஜெயலலிதாவால் அப்போது அறிவிக்கப்பட்டபோதே, "தற்போதைய தலைமைச் செயலகம் தகுதிவாய்ந்ததாக இல்லை. ராணி மேரி கல்லூரி கட்டிடங்கள் மோசமான நிலைமையில் உள்ளன. அதை இடிக்க வேண்டும். புதிய தலைமை செயலக வளாகம் அவசியம்.'' என்றெல்லாம் கூறப்பட்டது.

அந்தக் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் - தி.மு.க. ஆட்சியில் கட்டி 14-8-1975 அன்று திறந்து வைக்கப்பட்ட - நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது என்றும், கசிவு ஏற்படுகிறது என்றும், எனவே கோட்டையில் இருந்து உடனடியாக தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்போது ஜெயலலிதா கூறினார்.

அதையெல்லாம் மனதிலே கொண்டு தி.மு.க. ஆட்சியிலே புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜெயலலிதா அந்தப் புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்து விட்டு, பழைய தலைமைச் செயலகத்திலேயே தான் இருப்போம், நாமக்கல் கவிஞர் மாளிகையை புனருத்தாரணம் செய்யப்போகிறோம் என்றெல்லாம் ஆரம்பித்திருப்பது விதண்டாவாதம்; வெறுப்பினாலும், காழ்ப்புணர்ச்சியாலும் ஏற்பட்ட விளைவு; என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது புதிய தலைமைச் செயலகத்திற்கு இடம்மாறிய பிறகு; தலைமைச் செயலகத்தை, பழைய இடத்திலேயே தொடர்ந்து நடத்துவோம் என்றும்; புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தமாட்டோம் என்றும் கூறி, அங்கே வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை எல்லாம் பெயர்த்தெறிகின்ற பணியிலே அரசு ஈடுபட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியிலே எழுப்பப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையை மட்டும் புனருத்தாரணம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாமா? தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்களின் வழியாகத்தானே ஜெயலலிதாவின் கார் செல்லுகிறது! கருணாநிதி கட்டிய மேம்பாலம், அதிலே நான் பயணம் செய்யமாட்டேன் என்று நிறுத்திவிட்டாரா என்ன?

டெல்லி சென்றபோது அவசரஅவசரமாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தை சீர்படுத்தி அங்கே சென்று தங்கினாரே; நான் கட்டிய கட்டிடம் என்பதற்காக அங்கே போகாமலா இருந்துவிட்டார். கோபம் என் மீதுதானே தவிர; நான் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் என்ன "பாவம்'' செய்தது?

எனவே முதலமைச்சர் பொறுப்புக்கு மூன்றாவது முறையாக வந்துள்ள ஜெயலலிதா இனியாவது, அரசியலில் பக்குவப்பட்ட ஒரு தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சி செய்ததையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது என்பது அவர் இருக்கும் பதவிக்கு அழகல்ல. எந்தவிதப் பெருமையையும் சேர்க்காது. மக்களின் வரிப் பணத்தைச் செலவழித்து கட்டப்பட்ட கட்டிடங்களை வேண்டாமென்று கூறுவது தன்னிச்சையான போக்கு மட்டுமல்ல; மக்களையே அவமதிப்பதாகும்.

புதிய தலைமைச் செயலகம் தமிழக அரசுக்குச் சொந்தமான இடம். அனைத்து அலுவலகங்களையும் ஒரே இடத்தில் அமைத்திட முடியும். ஆனால் பழைய தலைமைச் செயலகம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. காலத்தின் மாற்றத்திற்கேற்ற நிர்வாகத் தேவைகளை அங்கே நிறைவு செய்திட முடியாது.

இதற்கு மேல் நான் எதுவும் எழுதத் தேவையில்லை என்று கருதுகிறேன். பகுத்தறிந்து பார்க்கும் - பழக்கமும் தெளிவும் தமிழ் மக்களுக்கு அறவே அற்றுப்போய்விட்டதாக நான் கருதவில்லை. அந்த நம்பிக்கையின் ஒரு துளிதான் இந்த அறிக்கை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+