அடுத்த உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங்-பிள்ளைக்கு சி.வி.சி.?
டெல்லி: மத்திய உள்துறைச் செயலாளராக பாதுகாப்புத் துறையில் உற்பத்திப் பிரிவில் செயலராக உள்ள ஆர்.கே.சிங் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
தற்போதைய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை, காலியாக உள்ள ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜி.கே.பிள்ளையின் பதவிக் காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு பெற டெல்லியில் கேரள லாபி தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், அவருக்கு அதற்கு இணையான பதவியான ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியைத் தர காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த பி.ஜே.தாமசின் பதவியை ஊழல் புகார் காரணமாக உச்ச நீதிமன்றம் பறித்தது. இதையடுத்து 3 மாதமாக இந்தப் பதவி காலியாகவே உள்ளது. இதையடுத்து பிள்ளைக்கு இந்தப் பதவியைத் தந்துவிட்டு, உள்துறைச் செயலாளராக ஆர்.கே.சிங்கை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறையின் உற்பத்திப் பிரிவின் (Ministry of Defence, Defence Production) செயலாளராக உள்ள ஆர்.கே.சிங்கிடம் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 'இன்டர்வியூ' நடத்தினார்.
சிங் ஓ.கே. என்று சிதம்பரம் கூறியதையடுத்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை ஆர்.கே.சிங் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அடுத்த 2 ஆண்டு காலத்துக்கு உள்துறைச் செயலாளர் பதவிக்கு அவர் நியமிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.
ஆர்.கே.சிங் 1975ம் ஆண்டு பிகார் கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். முன்பு உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றியுள்ளார். எந்த புகாரிலும் சிக்காத மிஸ்டர் கிளீன் அதிகாரி என்பதால் அவரை சிதம்பரம் தேர்வு செய்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications