3 மாதங்களுக்கு அதிமுக அரசு மீது விமர்சனம் கிடையாது-தமிழக பாஜக
சென்னை: 3 மாதங்களுக்கு அதிமுக அரசை விமர்சிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக பாஜகவின் செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கியது. 2வது நாளான இன்று மூத்த பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.
இக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்ற தேர்தலை சந்திப்பது, கட்சி வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
-சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு, வாழ்த்து.
-பாஜகவுக்கு கணிசமான அளவில் வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.
-தமிழ்நாட்டை போல மத்தியிலும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் காங்கிரசை, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
-கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
-2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய மந்திரி தயாநிதி மாறனுக்கும், தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் மீதான குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்க வேண்டியிருப்பதால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
-சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை பாஜக வரவேற்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் கிராமபுற மாணவர்களின் நிலையை அறிந்த பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும்.
-தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை அரசே வசூலித்து பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் நடத்த இயலாத பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
-கடந்த ஆட்சியில் அபகரிக்கப்பட்ட தனியார் மற்றும் கோவில் சொத்துக்களை அரசு தனிப்படை அமைத்து அதை மீட்க வேண்டும்.
-சித்திரை முதல் நாளை பல ஆண்டுகளாக பாரம்பரியமாக தமிழக மக்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் தன்னிச்சையாக “தை" முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. இதை தமிழக மக்கள் ஏற்கவில்லை. எனவே, மீண்டும் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நிருபர்களி்டம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், புதிதாகப் பொறுப்பேற்ற அதிமுக அரசை 3 மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம். பேரவையில் பாஜகவுக்கு பிரதிநிதிகள் இல்லையென்றாலும் மக்கள் மன்றத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர்ந்து வருகிறது. பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதினாலும், போராட்டங்கள் நடத்தினாலும் இலங்கை படையினரின் அட்டகாசம் நின்றபாடில்லை. இதற்கு மத்திய அரசின் இயலாமையே காரணம்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. 2006 பேரவைத் தேர்தலில் பெற்றதைவிட அதிக வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளோம். பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
வரும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் என்ற சூழல் உள்ளதால் அத்தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications