நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ
கடலூர்: நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதிமுகவில் இணையும் விழா கடலூரில் நடந்தது. அதில் பேசிய வைகோ, மதிமுகவில் புதிய ரத்தம் பாய்ச்சப்படுவதால், இந்த இயக்கம் புதுப்பொலிவு பெறுகிறது.
திமுக தன்னைத் தானே சோதனைக்குஆட்படுத்திக் கொண்டு இருக்கிறது. அது அவர்களாகவே தேடிக் கொண்டது. நிராயுதபாணிகளை தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை.
1993ல் என்னை திமுகவிலிருந்து நீக்கியபோது என்ன காரணங்களைச் சொன்னார்களோ, அது இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அதே நேரத்தில் மதிமுக என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகம், தன்னலம், சுயநலம், தன் குடும்பம் என்ற நிலைப் பாடுகளால் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று, மக்கள் முடிவு எடுத்ததால் எழுதிய தீர்ப்பு தான் சட்டமன்றத் தேர்தல் முடிவு.
நாமாக அவசரப்பட்டு அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. நாம் வெளியேறும் நிலையைத் திட்டமிட்டே உருவாக்கினார்கள்.
மதிமுகவின் வரலாற்றில் இது முக்கிய கட்டம். இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மதிமுக இருக்கும். காலம் கனிந்து வரும்போது மக்கள் நம்மை எங்கே வைக்க விரும்புகிறார்களோ அங்கே வைப்பர்கள்.
17 ஆண்டுகளாக இந்த இயக்கத்துக்குப் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லும் தோழர்களுக்கு, இனிதான் வேலை இருக்கிறது. மதிமுகவுக்கு பொற்காலம் உருவாகி விட்டது என்றார் வைகோ.
புதிய பாதை வகுப்போம்-நாஞ்சில் சம்பத்:
இந் நிலையில் மதுரையில் மதிமுக 18ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் அண்ணா நகரில் நடந்தது. அதில் பேசிய மாநில கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத்,
மதிமுக சோதனைகளைக் கடந்து வளர்ந்த இயக்கம். தொண்டர்களின் சுய உழைப்பால் உயர்ந்த இயக்கம். சோதனைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அன்புத்தலைவர் வைகோ அதனை சகித்து கொண்டு மக்கள் மன்றத்தில் பணி செய்து வருகிறார். இதனால் மக்களின் சிம்மாசனத்தில் மதிமுக நிலையான இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும். நாம் பல்வேறு காலக்கட்டங்களில் பிறரின் வெற்றிக்காக பாடுபட்டோம், உழைத்தோம், நம் உழைப்பில் வெற்றியை ருசித்தவர்கள் உண்டு. அது வரலாறு.
இனியும் அதுபோன்ற நிலை ஏற்படாது. மதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல புதிய பாதை அமைத்து உழைப்போம். மதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள் விரைவில் மலரும் என்றார்.












Click it and Unblock the Notifications