ஜுலை 3-ம் தேதி முதல் புதுவை-டெல்லிக்கு புதிய சூப்பர்பாஸ்ட் ரயில்: இன்று முன்பதிவு துவக்கம்
புதுச்சேரி: டெல்லி- புதுச்சேரி இடையே புதிய வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜுலை மாதம் 3-ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
2011-2012-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் டெல்லி-புதுச்சேரி இடையே புதிய வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய ரயில் சேவை வரும் ஜுலை மாதம் 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜுலை 3-ம் தேதி டெல்லியில் இருந்தும், 6-ம் தேதி புதுச்சேரியில் இருந்தும் இயக்கப்படுகிறது.
புதுச்சேரி- புது டெல்லி வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 22403) புதுச்சேரியில் இருந்து புதன்கிழமை காலை 9.05 மணிக்கு புறப்படும். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு டெல்லி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் புது டெல்லி-புதுச்சேரி வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22404) டெல்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு புதுச்சேரி வந்து சேரும்.
இந்த ரயில் சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, வாரங்கால், பல்லார்ஜா, நாக்பூர், போபால், ஜான்சி, ஆக்ரா கன்டோன்மென்ட், மதுரா ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்றுமுதல் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லிக்கு முதல் ரயில்
முன்னதாக இதுகுறித்து புதுவையைச் சேர்ந்தவரும், மத்திய இணையமைச்சருமான நாராயணசாமி கூறுகையில்,
கடந்த 4 ஆண்டுகளில் மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு புதுச்சேரிக்கு பல்வேறு ரயில் சேவையை அளித்துள்ளது. ஏற்கெனவே புதுச்சேரி -மங்களூர், திருவனந்தபுரம், புவனேஸ்வரம், கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு ரயில் வசதி இருக்கிறது.
தற்போது டெல்லிக்கும் ரயில் வசதி கிடைத்துள்ளது. இது வாரத்துக்கு ஒருமுறை செல்லும் ரயில் வசதியாக இருக்கும். இதில் 22 பெட்டிகள் இருக்கும். அதை தினந்தோறும் செல்லும் ரயிலாக மாற்றவும் நடவடிக்கை எடுப்போம்.
இந்த ரயில் புதுச்சேரியைச் சுற்றியுள்ள விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் வியாபாரம் பெருகும்.
அடுத்தக் கட்டமாக புதுச்சேரியில் இருந்து மும்பைக்கும் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுப்போம். இதனால் புதுச்சேரியை பெரிய நகரங்களுடன் இணைக்கும் திட்டம் நிறைவேறும் என்றார்.












Click it and Unblock the Notifications