திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷம் திருவட்டார் கோவிலுக்குச் சொந்தமானதா?

திருவிதாங்கூர் சமஸ்தானம்
திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் ஆலயம் திருமாலின் 108 திவ்ய தேசங்களில் பழமையானது. இது திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத்தை விட பழமையானது, முதன்மையானதாகும். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் ஆதி கேசவ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
திருவிதாங்கூர் மன்னர்களின் முதல் குலதெய்வமாக போற்றப்படும் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்தில் நடைபெறுவதைப்போன்றே அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டுக்கு சொந்தம்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்த பொழுது ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தின் நகைகள் அனைத்தும் அங்குதான் வைக்கப்பட்டிருந்தாக குமரி மாவட்ட பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சமஸ்தானத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் இரண்டு கோவிலின் நகைகளும் பாதுகாப்பு கருதி பத்மநாபசுவாமி ஆலயத்தின் ரகசிய அறைகளில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்புகின்றனர் பக்தர்கள்.
இதற்காக உள்ள பழங்கால செம்பு பட்டயத்தை ஆராய்ந்தால் நகைகள் குறித்த தகவல்கள் தெரிய வரும் என்று கூறும் பக்தர்கள் ஆதிகேசவ பெருமாளுக்கு சொந்தமான நகைகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி தற்போது கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு நகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 5 லட்சம் கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருவண்ணாமலை ஆலயத்திலும் பொக்கிஷங்கள்?
இதற்கிடையே, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தங்கம், வைரங்கள் அடங்கிய பொக்கிஷங்கள் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். ரகசிய அறைகளில் உள்ள நகைகளை கணக்கெடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிடவேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் 5-ம் நாளன்று ஊர்வலத்தின் போது உற்சவருக்கு பச்சைக்கல் பதித்த மாலை அணிவிப்பது வாடிக்கை.
கடந்த 4 வருடங்களாக பச்சைக்கல் மாலை அணிவிக்கப்படுவதில்லை என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், மூலவர் சிலையின் பாதத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி ரூபாய் மதிப்பிலான வலம்புரிச்சங்கும் தற்போது காணப்படுவதில்லை என்றும் பக்தர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கோவிலின் உள்ளே ரகசிய அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகள் வைக்கப்பட்டிருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நகைகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலில் நடைபெறும் முறைகேடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications