பங்கா, பங்களா, பெங்கால்?- மேற்கு வங்கப் பெயரை மாற்ற முடிவு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற மமதா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு இடது சாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மேற்கு வங்க முதல்வராக பதவியேற்ற 2 மாதங்களிலேயே மமதா பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். இது வரை மேற்கு வங்க மாநிலத்தில் மாற்றங்களை கொண்டு வந்த அவர் தற்போது மாநிலத்தின் பெயரையே மாற்ற முடிவு செய்துள்ளார். பெங்கால், பங்கா, பங்களா ஆகிய பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கு முக்கிய எதிர்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அம்மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியதாவது,
அனைத்து மாநில கூட்டங்களில் எப்பொழுதுமே எங்கள் மாநிலத்தின் பெயர் தான் கடைசியில் இருக்கும். எங்கள் முறை தான் கடைசியில் வரும். எங்கள் முறை வருவதற்குள் அனைவரும் தூங்கிவிடுவார்கள். அதனால் மாநிலத்தின் பெயரை மாற்றுவது நல்ல விஷயம் என்றார்.
இதற்கு முன் ஆட்சியில் இருந்த இடதுசாரி அரசுகளும் மாநிலத்தின் பெயரை மாற்ற விரும்பி, சட்டசபையில் தீர்மானங்கள் கூட நிறைவேற்றின. ஆனால் தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களாகவே இருந்துவிட்டன.
ஏற்கனவே இடது சாரி அரசுகள் மாநிலத்தின் பெயரை மாற்ற முடிவு செய்திருந்ததால், மமதாவின் முயற்சிக்கு எதிர்ப்பே கிடையாது என்று இடது சாரி தலைவர் பிமன் போஸ் தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் மற்றும் அம்மாநில சமூக வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு தான் புதிய பெயர் தேர்ந்தெடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications
