போலீஸாரை 8 மணி நேரம் ஓட விட்டு வித்தை காட்டிய வாலிபர்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய வாலிபர் கிட்டத்தட்ட 8 மணி நேரம் போக்கு காட்டி பெரும் அவஸ்தைக்குள்ளாக்கி விட்டார்.
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ஜெனிலியா. நாகர்கோவிலில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கடந்த 6ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது அவர் அன்று முதல் பள்ளிக்கே வரவில்லை என தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தோழிகளிடம் விசாரித்தனர். அப்போது வடசேரி பகுதியை சேர்ந்த சுஜீன் என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக மாணவியின் தந்தை வடசேரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சுஜீன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
நேற்று முன்தினம் கிரிபாறையில் சுஜினும், ஜெனிலியாவும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சென்று இருவரையும் அழைத்து வந்தனர். ஜெனிலியாவை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், சுஜினை வடசேரி காவல் நிலையத்திலும் வைத்திருந்தனர். நேற்று காலை 10 மணி அளவில் இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையி்ல் அதிகாலை 3 மணி அளவில் வடசேரி காவல் நிலையத்தில் இருந்து சுஜின் தப்பியோடினார். அப்போது காவல் நிலையத்தில் 2 போலீசார் மட்டுமே இருந்தனர். அவர்கள் துரத்தியும் சுஜினை பிடிக்க முடியவில்லை.
ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதற்கிடையே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருக்கும் ஜெனிலியாவை சந்திக்க காலை 8 மணிக்கு சுஜின் வந்தார். மகளிர் போலீசாரிடம் நான் எனது காதலியை பார்க்க வேண்டும். சந்திக்க விடுங்கள் என்றார். சுஜினிடம் மகளிர் போலீசார் நைசாக பேசினர். அவருக்கு தெரியாமல் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
எஸ்ஐக்கள் முருகேசன், சுஜித் ஆனந்த், மற்றும் போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விரைந்தனர். இதை பார்த்த வாசலில் நின்றுகொண்டிருந்த சுஜின் ஓட்டம் பிடித்தார். அப்பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி, வேளாண்மை விரிவாக்க அலுவலகம், எம்எல்ஏ அலுவலகம், போலீஸ் ,குடியிருப்பு, பொருளாதார குற்றப்பிரிவு என மாறி, மாறி ஓடினார். போலீசார் அந்த பகுதியில் தேடியும் சுஜினை பிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே வடசேரி தங்கம் தியேட்டர் ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்த சுஜினை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதிகாலை 3 மணிக்கு தப்பியோடிய சுஜினை காலை 10 மணிக்கு பிடிபட்டார். அதன்பின்னர்தான் போலீசார் நிம்மதி மூச்சு விட்டனர்.
வடசேரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற சுஜினிடம் விசாரித்தனர். நான் எனது காதலியை பார்க்க வேண்டும். அவளை தான் திருமணம் செய்வேன். எங்களை பிரிக்காதீர்கள் என்றார். பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications