ராஜ்யசபா தேர்தல்: அதிமுக சார்பில் ஜெயா டிவி ரபி பெர்னார்ட் மனு தாக்கல்

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கே.வி.ராமலிங்கம், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனால் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தப் பதவிக்கான தேர்தல் வரும் 22.07.2011 தேதி நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் ஜெயா டிவியின் மூத்த பத்திரிக்கையாளர் ரபி பெர்னார்ட் போட்டியிடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று பெர்னார்ட் தனது வேட்பு மனுவை சென்னை தலைமைச் செயலகத்தில் தாக்கல் செய்தார்.
பிலிப்பைன்சின் ரேடியோ வெரிடாஸ் வானொலியிலும் பின்னர் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரசிலும் பணியாற்றியவர் ரபி பெர்னார்ட்.
இதையடுத்து சென்னை லயோலா கல்லூரியின் விசுவல் கம்யூனிகேசன்ஸ் பிரிவில் பணியாற்றிய பின் சன் டிவியில் சேர்ந்தார். சன் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானார்.
இந் நிலையில் நிலா டிவி என்று தானே ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கினார். ஆனால், ஆரம்பித்த வேகத்திலேயே மூடப்பட்டது. இதையடுத்து விஜய் டிவியில் பணியாற்றிய பெர்னார்ட், பின்னர் ஜெயா டிவியில் சேர்ந்ததோடு அதிமுகவிலும் இணைந்தார்.
இவரது நிலா டிவிக்கு மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி நிதி உதவி செய்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை பெர்னார்ட் அப்போதே மறுத்தார்.












Click it and Unblock the Notifications