அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான நில மோசடி புகார் வாபஸ்: எஸ்பி தகவல்
திருவண்ணாமலை: தமிழக வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுக்கப்பட்ட நில அபகரிப்பு புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த 19-ம் தேதி திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட நிர்வாகியுமான சி.மூர்த்தி தமிழக வணிக வரித்துறை அமைச்சர் அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார்.
அவர் புகார் மனுவை மாவட்ட எஸ்பி சாமுண்டீஸ்வரியிடம் கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
கலசபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பள்ளிப்பாட்டில் நான் ரியல் எஸ்டேட் நடத்தி வந்த இடத்தை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னிடம் இருந்து வாங்கினார். ஆனால் அதற்கான பணம் ரூ. 31 லட்சத்தை கொடுக்கவில்லை. எனவே, எனது நிலத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை எஸ்பி அலுவலகம் வந்த சி.மூர்த்தி எஸ்பி சாமுண்டீஸ்வரியை சந்தித்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். அவர் கொடுத்த வாபஸ் மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நான் ஏற்கனவே கொடுத்த புகார் மனுவில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் கொடுத்து விட்டேன். எனவே, நான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து எஸ்பி சாமுண்டீஸ்வரி அந்த புகார் மனுவை மூர்த்தியிடமே திருப்பிக் கொடுத்தார். இந்த தகவலை எஸ்பி சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications