கிணற்றில் கிடந்த நர்சிங் கல்லூரி மாணவியின் உடல்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிணற்றில் பிணமாக கிடந்த நர்சிங் கல்லூரி மாணவியை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை, செங்கம் அடுத்த எறையுர் கிராமத்தை சேர்ந்தவர் சேக்கவுஸ். ஆடு வியாபாரி. அவரது மகள் யாஸ்மின் (18). திருவண்ணாமலையில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாணவி. நேற்றுமுன்தினம் காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி, மாலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
புகாரின் பேரில், பாச்சல் போலீசார், விசாரித்து வந்தனர். இந்நிலையில், யாஸ்மின் புத்தகத்தில் சிக்கிய ஒரு செல்போன் நம்பரில் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், யாஸ்மினுக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க கேட்டுக் கொண்டதாக கூறி இணைப்பைத் துண்டித்தார்.
இந்நிலையில், பண்டிதப்பட்டு பள்ளி அருகே உள்ள கிணற்றில், ஒரு பெண் உடல் கிடப்பதாக, நேற்று திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிணத்தை கைப்பற்றி விசாரித்த போது, அது மாயமான யாஸ்மின் எனத் தெரிந்தது.
இத்தகவல் அறிந்த பெற்றோரும், உறவினர்களும், மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் சாலையில் மறியலில் ஈடுபடப் போவதாக தகவல் பரவியதால், போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
யாஸ்மின் மாயமான அன்று, அவரது மொபைல்போனுக்கு, உடனே கிளம்பி வரவிட்டால், நான் உன் வீட்டிற்கு வந்து விடுவேன் என்ற மிரட்டல் எஸ்.எம்.எஸ்., வந்ததாகத் தெரிகிறது. கல்லூரி சீருடையில் முகத்தில் காயத்துடன் பிணமாக மீட்கப்பட்ட யாஸ்மினை, யாரோ கொலை செய்து, கிணற்றில் போட்டிருக்கலாம் என்ற கோணத்தில் திருவண்ணாமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
