காங்கிரஸ், சோனியாவை விமர்சித்த மணிசங்கர் அய்யரை கட்சியில் இருந்து நீக்குக் கோரிக்கை
சென்னை: காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா காந்தி பற்றி அவதூறாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரை உடனே கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநில நிர்வாகிகள் கே.விஜயன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஜோதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியை இழிவுபடுத்தும் விதமாக கட்சியை சர்க்கஸ் கூடாரம் என்றும், கட்சித் தலைவி சோனியாவையும், மற்ற நிர்வாகிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். மன நோயாளி போல் அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.
காங்கிரஸ் கட்சிக்காக உழைக்காமல் பதவிக்கு வந்ததால் அவருக்கு கட்சியின் வரலாறு, தியாகம் பற்றி தெரிந்திருக்காது. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆளும்போதெல்லாம் அமைச்சர், நிர்வாகி, செயற்குழு உறுப்பினர் என்ற பல பதவிகளை அனுபவித்தவர்.
தன்னுடைய பதவிக்காலத்தில் கட்சிக்கோ, கட்சித் தொண்டர்களுக்கோ எந்தவித நன்மையும் செய்யாமல் சுயநலமாக செயல்பட்டவர். கடந்த 20 ஆண்டு காலமாக தமிழக காங்கிரஸ் கட்சி நடத்திய எந்த ஒரு போராட்டத்திலும், கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் கட்சியை அலட்சியப்படுத்தியவர்.
நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட கட்சி தலைமை மறுத்தபோது கட்சிக்கு துரோகம் செய்து திரிணாமுல் கட்சியின் வேட்பாளராக மேற்கு வங்கத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர். மீண்டும் சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரி கெஞ்சி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் தான் ரோமாபுரி அய்யர் சோனியாகாந்தி மீதும் கட்சியின் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார். அயோத்தியில் பாபர் மசூதி இடித்ததற்கு முழுக்க முழுக்க அந்த மாநிலத்தில் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசு தான் காரணம் என்பது நாடறிந்த உண்மை. ஆனால் ரோமாபுரி மணிசங்கர் அய்யரோ பாபர் மசூதி இடிப்பிற்கு மறைந்த பிரதமர் நரசிம்மராவ் தான் காரணம் என்று பல ஆண்டுகள் கழித்து இப்போது கூறியிருப்பது பைத்தியக்காரனுடைய பேச்சாக உள்ளது.
மணிசங்கர் அய்யரின் சமீபத்திய நடவடிக்கைள், பேச்சுகள் அனைத்தும் மதவெறி பிடித்த பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறது. கட்சியில் பல பதவிகளை அனுபவித்து விட்டு இப்போது கட்சியின் தலைமை மீது பொய் குற்றம் சுமத்தி கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்திய துரோக செயல் புரிந்த மனநோயாளி மணிசங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனே நீக்குமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைமையை அன்போடு கேட்டுக் கொள்கிறாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications