4-ம் தேதி சோனியா முன்னிலையில் காங்கிரஸில் உறுப்பினராகும் சிரஞ்சீவி
ஹைதராபாத்: பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வரும் 4-ம் தேதி சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டு உறுப்பினராகிறார்.
நடிகர் சிரஞ்சீவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரஜா ராஜ்ஜியம் என்னும் கட்சியைத் துவங்கினார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலி்ல் தனித்துப் போட்டியிட்ட பிரஜா ராஜ்ஜியத்திற்கு 18 இடங்கள் கிடைத்தது.
இந்நிலையில் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸில் இணைக்க முடிவு செய்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு பிரஜாராஜ்ஜியம் காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 4-ம் தேதி நடிகர் சிரஞ்சீவி டெல்லி சென்று அங்கு சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகிறார்.
இது குறித்து சிரஞ்சீவியின் நண்பர் சீனிவாசராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்கும் விழாவை பிரமாண்டமாக நடத்த நினைத்தார். அதற்கு சோனியா காந்தி சம்மதி்க்கவில்லை. அதனால் அவர் வரும் 4-ம் தேதி டெல்லியில் சோனியா முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகத் திட்டமிட்டுள்ளார் என்றார்.
சோனியாவுக்கு பிடிக்கவில்லை: ஜெகன் புலம்பல்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
என் வளர்ச்சி சோனியா காந்திக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அமைச்சர் சங்கர்ராவ் மூலம் என் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சோனியாவின் தூண்டுதலினால் தான் சிபிஐ என்னிடம் விசாரித்து வருகிறது. கணக்குகள் எல்லாம் சரியாக வைத்திருக்கையில் நான் எந்த விசாரணையையும், வழக்கையும் கண்டு பயப்படப் போவதில்லை.
என்னை எப்படியாவது அரசியலில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று சோனியா காந்தி சதி திட்டம் தீட்டியுள்ளார். எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. அதனால் நான் யாரையும் கண்டு அஞ்சமாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications