ஈழத் தமிழர் பிரச்சினை- சென்னையில் மாநாடு நடத்த சிபிஎம் முடிவு
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழக் கூட்டத்தில், இலங்கை தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, உரிமை உள்ளிட்ட அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சி அளித்திடும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு காண வலியுறுத்தி, இலங்கைத்தமிழர் சமஉரிமை-அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு'' நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் நடந்த கூட்டத்திற்கு, தமிழக மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
நிலப்பறிப்பு மற்றும் நிலமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலத்தை மீண்டும் அளிக்க வேண்டும். பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, சமச்சீர் கல்வியை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை உடனடியாக உருவாக்க வேண்டும்.
மதுரை மாவட்டம், பொதும்பு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவிகளை, தலைமையாசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த வழக்கை காவல்துறை ஒரு குழு அமைத்து விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும்.
சென்னை பெரியார் திடலில், கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் தலைமையில், வரும் ஜூலை 30ம் தேதி, "இலங்கைத்தமிழர் சமஉரிமை- அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு'' நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டில், இலங்கை தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து மற்றும் உரிமை, அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சி அளித்தல், இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காணுதல், முகாம்களில் வாடும் தமிழர்களுக்கு மறுவாழ்வு, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை சுயேச்சையான, நேர்மையான விசாரணை உள்ளிட்ட கருத்துகள் வலியுறுத்தப்படும். இதில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இலங்கை தமிழ்க் குடியரசுக் கட்சி தலைவர் ஆர்.சம்பந்தம் உள்ளிட்டு பல தலைவர்களை பங்கேற்க செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி உள்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications