ஜெயலலிதாவைப் பற்றி பேச கருணாநிதிக்கு தகுதியில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சரவை இலாகா பட்டியலை முழுமையாகப் படித்துப் பார்க்காமல் அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதி விரக்தியில் உளறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கண் துடைப்பு, கபட நாடகம் எது? என்ற தலைப்பில், அமைச்சரவை இலாகா பட்டியலை படிக்காமல் அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கும் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதில் உள்ள உண்மை நிலையை எடுத்துக்கூறுவது எனது கடமை என கருதுகிறேன்.

கருணாநிதி தன்னுடைய கேள்வியும் நானே, பதிலும் நானே அறிக்கையில், விஜிலென்ஸ் துறையை முதல் அமைச்சர் வகித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த துறையை வைத்துக்கொள்வது நியாயமில்லை என்றும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்ற 16.5.2011 அன்று முதலே 'ஊழல் தடுப்பு'' இலாகா சட்டத்துறை அமைச்சர் வசமே இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல், 2001 முதல் 2006 வரை முதல் அமைச்சராக இருந்த போதும், 'ஊழல் தடுப்பு'' இலாகா என் வசம் தான் இருந்தது என்பதையும் இந்த தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற பழமொழிக் கேற்ப, ஆட்சி அதிகாரமும் போய்விட்டது, குடும்ப உறுப்பினர்களும், தனது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்ற விரக்தியில், உண்மை விவரங்களை தெரிந்து கொள்ளாமல் உளறலின் உச்சக்கட்டத்திற்கு கருணாநிதி சென்று இருக்கிறார்.

கருணாநிதி மேலும் தன்னுடைய அறிக்கையில், கேரள முதல்வர் மீது விஜிலென்ஸ் குற்றச்சாட்டு எழுந்ததுமே அந்த துறையின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுவிட்டதோடு, விசாரணையை சந்திப்பதாக அவர் தெரிவித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.

தன் மீதுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்திற்கு சென்று சந்திக்க திராணி இல்லாமல், அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்ற கருணாநிதி, கேரள முதல்வரை உதாரணம் காட்டி முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. முதல் அமைச்சரை பொறுத்த வரையில், தன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் துணிச்சலுடன், நேர்மையாக சந்தித்து வருவதுடன், இதுவரை 13-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.

அவர் நினைத்திருந்தால் தன் மீதுள்ள வழக்குகளை கருணாநிதி போல் கொல்லைப்புற வழியாக அப்பொழுதே திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யாமல், துணிச்சலுடன், நேர்மையாக தன் மீது கருணாநிதியால் புனையப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார். எனவே, முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பாலபாடம் கற்பிக்க தேவையில்லை.

இதே கேள்வி பதில் அறிக்கையில் இன்னொரு புளுகு மூட்டையையும் அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. முதல் அமைச்சர் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அன்றைய பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா சொன்னதாகக் குறிப்பிட்டு, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் புகைப்படத்தை காட்டி அன்றைய பேரவைத் தலைவர் பதில் அளித்ததாகவும் கூறியிருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

உண்மை நிலை என்னவென்றால், ஜெயலலிதா 11.1.2010 அன்று சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்பது தான் அவரது குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டினை மறுக்கும் வகையில், ஜெயலலிதா அன்றைய பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு அவர் பதில் அளிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் 20.1.2010 தேதியும், 21.1.2010 தேதியும் சில நாளிதழ்களில் வெளியானது. ஆனால், அன்றைய பேரவைத் தலைவரின் சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இந்த வண்ணப் புகைப்படம் வெளிவந்த உடனேயே, அந்த வண்ண புகைப்படத்தில் தான் அணிந்திருந்த புடவையின் நிறம் கருஞ் சிவப்பு என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, 11.1.2010 அன்று சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்ததாகவும் எடுத்துக் கூறினார்.

இனி வருங்காலங்களில், கருணாநிதி விடும் அறிக்கைகளை எல்லாம் அப்படியே நம்பி வெளியிடாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் செய்திகளை வெளியிடுமாறு அனைத்து பத்திரிகைகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+