தமிழகத்தில் 5 தனியார் நிறுவனங்கள் அமைக்கும் புதிய அனல் மின் நிலையங்கள்!

இந்த நிறுவனங்களின் பெயர்களை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இவற்றுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக மின்சார உற்பத்தி மற்றும் வினியோகக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீர்காழி, தூத்துக்குடி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட 5 இடங்களில் இந்த அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த 5 நிலையங்களும் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உள்ளன.
தமிழகத்தில் இப்போது மின்சாரத் தேவை 10,500 மெகாவாட் முதல் 11,000 மெகாவாட் ஆக உள்ளது.
ஆனால், இப்போது 8,000 மெகாவாட் முதல் 10,237 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 2,500 முதல் 3,500 மெகாவாட் வரை மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்கும் வகையில் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 5 தனியார் நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் கூடுதலாக வெறும் 206 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுங்குவார்சத்திரத்தில் துணை மின்நிலையம்-ஜெயலலிதா தொடங்கி வைத்தார்:
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்கி, தமிழகத்தை மின்மிகு மாநிலமாக மாற்றிடவும், மாநிலம் முழுவதும் மின் வினியோகத்தை சீர்படுத்தி மக்களுக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்கிடவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்த துணை மின் நிலையம் வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தினை மின்பகிர்மானம் செய்து சுங்குவார்சத்திரம் பகுதியில் வழங்குவதற்கு பெரிதும் உதவும்.
ஸ்ரீபெரும்புதூரில் தற்சமயம் உள்ள 400 கி.வோ. துணை மின் நிலையம் மட்டுமே சென்னை மற்றும் புறநகர் பகுதியின் மின்பகிர்மானத்திற்கு உதவுகிறது. தற்போது இந்தப் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுவதால் ஸ்ரீபெரும்புதூர் 400 கி.வோ. துணை மின் நிலையத்தின் பளு குறைந்து சென்னை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதிகளில் மின் வினியோகம் சீர்பட வழிவகுக்கும்.
இத் துணை மின் நிலையம் 315 எம்.வி.ஏ திறனுள்ள இரண்டு 400/230 கி.வோ. மின் மாற்றிகளையும், 200 எம்.வி.ஏ. திறனுள்ள இரண்டு 400/110 கி.வோ. மின் மாற்றிகளையும் மற்றும் அதற்குண்டான மின் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது.
இத் துணை மின்நிலையம் 400.கி.வோ. தொடரமைப்பில் 2 ஜ் 600 மெ.வா. வட சென்னை அனல் மின் நிலையம் - இரண்டாம் கட்டம் மட்டுமின்றி அலமாதி 400 கி.வோ துணை மின் நிலையம், ஸ்ரீபெரும்புதூர் 400 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் புதுச்சேரி 400 கி.வோ. துணை மின் நிலையம் ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.
இத் துணை மின் நிலையத்திலிருந்து ஒரகடம், நோக்கியா, ஆரணி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் (மாம்பாக்கம்) 230 கி.வோ. துணை மின்நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும். வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் அலமாதி 400 கி.வோ. துணை மின் நிலையத்தில் இருந்து வரும் மின்தொடரமைப்பு நான்கு வழி சுற்றுப் பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மின் தொடர்பாதை அமைப்பதற்குத் தேவையான நிலத்தின் அளவு பாதியாக குறையும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் ரூ. 227.35 கோடி செலவில் காஞ்சீபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள 400 கி.வோ. துணை மின் நிலையத்தினை இன்று தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து தமிழக மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இந்தத் துணை மின் நிலையம் மூலம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்னழுத்தம் சீராக்கப்படுவது மட்டுமன்றி, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் துணை மின் நிலையத்தினை முதல்வர் திறந்து வைத்ததற்காக அப்பகுதியைச் சேர்ந்த சரளா என்பவர் நன்றி தெரிவித்து பேசியதாவது:-
வணக்கம் அம்மா, என் பெயர் சரளா. நான் சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவள். நான் கூலி வேலை செய்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் அடிக்கடி கரண்ட் கட் ஆகிறது அம்மா. அதனால் எங்கள் குழந்தைகள் படிப்பும், விவசாயமும் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது அம்மா.
இப்போது எங்கள் கிராமத்தின் அருகில் இந்த துணை மின்நிலையம் அமைக்கப்பட்டதால், எங்கள் குழந்தைகளும், எங்கள் விவசாயமும் பெரிதளவில் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் அம்மா. இனிமேல் சீரான மின்சாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன் அம்மா.
இந்த உதவியைச் செய்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு எங்கள் கிராமம் சார்பாகவும், எங்கள் பகுதி கிராம மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் துணை மின் நிலையத்தினை திறந்து வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுங்குவார்சத்திரத்தில் 400 கே.வி. உள்ள இந்த துணை மின் நிலையத்தை இன்று துவக்கி வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் அந்த பகுதியில் மின் அழுத்தம் சீர் செய்யப்படும் என்று நம்புகிறேன்.
அப்பகுதி மக்கள் இந்த துணை மின்நிலையத்தால் பயன்பெறுவதோடு அப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையை தெரிவித்து உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன், நன்றி, வணக்கம் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், எரிசக்தித் துறைச் செயலாளர் மற்றும் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications