திஹார் சிறையி்ல் அன்னா ஹஸாரேவுக்கு மருத்துவப் பரிசோதனை-கேஜ்ரிவால் தகவல்

அன்னா ஹஸாரேவுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால் இன்று சிறையை விட்டு வெளியே வந்தார். அவர் செய்தியாளர்கள் மற்றும் அன்னா ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், அன்னா ஹஸாரேவின் உடல் நிலை நன்றாக உள்ளது. அவர் கடந்த 48 மணி நேரமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அடுத்து ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடரவுள்ளார்.
நேற்று மாலை அவரை ஜிபி பந்த் மருத்துவமனையைச்சேர்ந்த டாக்டர்கள் குழு பரிசோதித்தது. சிறையை விட்டு வெளியேறும் முன்பு அவருக்கு திஹார் சிறை டாக்டர்கள் குழு உடல் பரிசோதனை செய்யும். அதன் பிறகே அன்னா வெளியே வருவார். சிறைக்குள்ளேயே மருத்துவக் குழு இருப்பதால், வெளியிலிருந்து மருத்துவக் குழு தேவைப்படாது.
ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மைதானத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு அன்னாவின் உடல் நிலையைக் கண்காணிக்க மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் ராம் லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் முடிந்த பின்னர்தான் அங்கு அன்னா ஹஸாரே செல்வார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பின்னரே அனைவரும் அங்கு செல்ல முடியும் என்றார் கேஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications