ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி செளமித்ரா சென் பதவி நீக்க தீர்மானம்-ராஜ்யசபாவில் நிறைவேற்றம்

நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செளமித்ரா சென் மீது எழுந்தது. இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை வந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி நியமித்தார்.
இந்த கமிட்டி நடத்திய விசாரணையில் செளமித்ரா சென் மீதான புகார்கள் உண்மையே என்று தெரிய வந்தது. இதையடுத்து செளமித்ரா சென்னை பதவி நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வர ராஜ்யசபா தீர்மானித்தது.
இதையடுத்து நேற்று இதுதொடர்பான தீர்மானத்தை சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரி அவையில் கொண்டு வந்தார்.அதன் மீது விவாதம் நடந்தது. நீதிபதி செளமித்ரா சென்னும் நேரில் வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டார். அப்போது தான் நிரபராதி, தன்னை பலிகடாவாக்கி விட்டனர் என்று வாதிட்டார் சென்.
இன்றும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அதன் இறுதியில் இன்று மாலை வாக்கெடுப்பு நடந்தது.
இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 189 பேர் கலந்து கொண்டனர். அதில் 172 பேர் தீர்மானத்தை ஆதரித்தும், 16 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். ஒருவர் நடுநிலை வகித்தார்.
இதையடுத்து தீ்ர்மானம் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார். அவரது அறிவிப்பை உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
ராஜ்யசபாவில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து அடுத்து லோக்சபாவில் இது விவாதித்து நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் குடியரசுத் தலைவருக்கு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் தெரிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து செளமித்ரா சென்னை பதவி நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார்.
முதல் நீதிபதி
ராஜ்யசபா மூலம் பதவி நீக்கப்படும் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது ராஜ்யசபா.
இதற்கு முன்பு கடந்த 19903ம் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பதவி நீக்க தீர்மானம் லோக்சபாவில் கொண்டு வரப்பட்டது. அப்போது ராமசாமிக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால், அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து ராமசாமி தப்பித்தார். அந்த வகையில் பதவிநீக்கம் செய்யப்படும் முதல் நீதிபதியாக செளமித்ரா சென் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications