செய்யூரில் 4000 மெ.வா. அனல்மின் நிலையம்: ஆகஸ்டு 2012-ல் மின்வெட்டு ரத்து - தமிழக அரசு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 4000 மெகாவாட் திறன் கொண்ட மெகா அனல் மின் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 2012-ல் மின்வெட்டு ரத்து செய்யப்படும், என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து அவர் கூறியது:
கடந்த ஆட்சியில் மின்சாரம் கொள்முதலில் வெளிப்படையான முறையை கடைப்பிடிக்காதது தான் இதற்கு காரணம். இப்போது வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் சராசரி யூனிட் ரூ.3.85-க்கு வாங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் சராசரி ரூ.5.50-க்கு வாங்கினார்கள். மார்க்கெட் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இப்போது ரூ.4.50-க்கு அதிகமாக வாங்கவில்லை. இதன் மூலம் மட்டுமே ரூ.900 கோடி சேமிக்கும் நிலையை முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ளார்.
காற்றாலை உற்பத்தி செய்யும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் கட்டமைப்பை கடந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தவில்லை. இப்போது தனியார் பங்களிப்புடன் அதற்கான சில திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு படிப்படியாக நீக்கப்படும்போது விவசாயத்திற்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
தற்போதைய 10,237 மெகாவாட் நிறுவு திறனிலிருந்து கிடைக்கும் மின்சாரம் 8 ஆயிரம் மெ.வா., மின் தேவை 10,500 முதல் 11,500 மெ.வா. ஆக இருப்பதால் 2500 முதல் 3500 மெகாவாட் பற்றாக்குறை நிலவுகிறது. காற்றாலைகள், மின்சாரம் வாங்குதல், மின் கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றால் இந்த பற்றாக்குறை ஈடுசெய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக மாற்ற புதிய மின் திட்டங்களை மேற்கொள்ளவும், இதுவரை தொடங்கப்படாத மின் திட்டங்களை செயல்படுத்தவும், செயல்பாட்டிலுள்ள திட்டங்களை விரைவாக நிறைவு செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பிரிவு, மத்திய பிரிவு மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மூலமாக 13,540 மெகாவாட் கூடுதலாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
செய்யூரில் 4000 மெ.வா. அனல்மின் நிலையம்
ரூ.18 ஆயிரம் கோடி செலவில் செய்யூரில் 4000 மெ.வா. திறன் கொண்ட மாபெரும் அனல் மின் திட்டத்தை உருவாக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் 12-ம் திட்டக்காலத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. காற்றாலை மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்குரிய புதிய கட்டமைப்புகளை நிறுவுதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு 'மரபுசாரா எரிசக்தி கொள்கை' தயாரிக்கப்பட்டு வருகிறது.
மின் கட்டுப்பாட்டு முறைகள் (மின்வெட்டு) உற்பத்தியில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து படிப்படியாக தளர்த்தப்பட்டு 2012 ஆகஸ்டு மாதம் முதல் மின்வெட்டு முழுமையாக விலக்கிக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின் சேமிப்பு நடவடிக்கையாக சிறு குழல் விளக்குகளை வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு ஒரு விளக்கு ரூ.15 என்ற குறைந்த விலைக்கு ஒரு வீட்டிற்கு அதிகபட்சமாக 4 சிறுகுழல் விளக்குகள் வழங்கப்படும். 1.40 கோடி பேருக்கு இப்படி வழங்குவதன் மூலம் 500 முதல் 600 மெகாவாட் வரை மின்தேவை குறையும்.
கடலுக்குள் காற்றாலை
தானியங்கி கண்காணிப்பு கட்டுப்பாடு மற்றும் தகவல் சேகரிப்பு அமைப்பு மற்றும் மின்விநியோக மேம்பாடு அமைப்புகளை அமல்படுத்த 110 நகரங்களுக்கு ரூ.417 கோடிக்கு மத்திய அரசு அனுமதித்து உள்ளது. 4 மாநகரங்களில் உருவாக்க ரூ.182.17 கோடி அனுமதித்து உள்ளது. இத்திட்டங்கள் 30.6.2012-க்குள் முடிக்கப்படும். வணிக மின் இழப்பை 15 சதவீதத்திற்கு குறைவாக கொண்டுவர திறன் கொண்ட மின்மாற்றிகளை அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் 87 நகரங்களில் ரூ.3279.56 கோடிக்கு அனுமதி வழங்கி உள்ளது. இத்திட்டங்கள் 2014-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடற்பரப்பு காற்று வளமிக்கதாக உள்ளது. செயல்விளக்க காற்றாலை மின் பண்ணை ஒன்று கடலுக்குள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது," என்று அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications