பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதாவால் மாநில அதிகாரம் பறிபோகும்-ஜெ. எதிர்ப்பு

இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குறித்த அரசியல் சட்ட (115வது திருத்தம்) மசோதா 2011 அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். இந்த சட்ட மசோதா நிதி குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவர் இந்த சட்ட மசோதா குறித்து மாநிலங்களின் கருத்துக்களை கோரியுள்ளார். தமிழக அரசின் கருத்துக்கள் தனியாக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை இந்த சட்டத்தின் மூலம் பறிப்பதற்கு இந்திய அரசு முயல்வதற்கு இக்கடிதத்தின் மூலம் நான் என்னுடைய அரசின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
மக்களுக்கு நெருக்கமாக உள்ள மாநில அரசுகள் அடிப்படை சேவைகளை வழங்குவதிலும், வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதிலும் அதிக பொறுப்புகளை கொண்டுள்ளன.
மாநிலங்களுக்கு விற்பனை வரிதான் மிகப்பெரிய வருவாயாகும். எனவே, மத்திய அரசு மேற்கொள்ளும் எந்தவொரு வரிசீர்த்திருத்தமும், மாநிலங்களின் வருவாயை குறைப்பதாகவோ அல்லது மாநிலங்களின் நிதி சுயாட்சியை பாதிப்பதாகவோ அமையக்கூடாது.
பொருட்கள் மற்றும் சேவை வரியை பொறுத்தவரை சீராக்குதல் என்ற பெயரில் வரிகளை விதிப்பதற்கு மாநிலங்களுக்கு ஏற்கனவே உள்ள குறிப்பிட்ட அதிகாரமும் பறிக்கப்பட்டு விடக்கூடாது.
நாடுமுழுவதும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே பொதுவான விகிதம் என்பதை பின்பற்றி வரி சீராக்குதலை அடைந்து விட முடியாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் ஏனென்றால் மாநிலங்களுக்கு வேறுபட்ட வருவாய் ஆதார அடிப்படைகளும், தேவைகளும் உள்ளன.
எனவே, பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை முதலில் இரண்டு விகிதத்திலும், பின்னர் ஒரே விகிதமாக ஒருங்கிணைப்பதும் சரியாக அமையாது. தமிழ்நாட்டில் வரி சராசரி விகிதம் 17% என்ற அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்படும். எந்தவொரு பொருட்கள் மற்றும் சேவை வரி உத்தேச திட்டமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.
உரிய கலந்துரையாடல் முறை மூலம் பொருட்கள் மற்றும் சேவை வரி முறை மற்றும் நடைமுறைகள் குறித்த செயல் திட்டத்தில் விரிவான கருத்துத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த பின்னணியில் வரி அமைப்பு, ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரி முறை வரி விகிதங்களை மாற்றுவதில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் போன்ற முக்கிய பிரச்சனைகளில் மாநிலங்கள் தெளிவாக இல்லை.
இத்தகைய முக்கியமான விஷயங்களில் தெளிவு இல்லாத நிலையில் இந்த சட்ட மசோதாவை இயற்றுவதற்கு வலியுறுத்துவதில் எந்த பயனும் ஏற்படாது. எனவே, பொருட்கள் மற்றும் சேவை வரி செயல் திட்டம் குறித்த விரிவான புரிதலை ஏற்படுத்த அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே கலந்துரையாடி ஆலோசனை நடத்த வேண்டியது முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.
மாநில நிதி அமைச்சர்களின் அதிகாரம் பெற்ற குழுவின் தலைவராக சுசில் குமார் மோடி பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த விஷயத்தை அதிகாரம் பெற்ற குழுவுக்கு முன்னெடுத்துச் சென்று முக்கிய விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டும்.
எந்த வரி சீர்த்திருத்தங்களும் பொருளாதாரத் திறன், பொருளாதார செயல்பாடுகள் ஆகியவற்றை மேம்படுத்தி சாதாரண மனிதர்கள் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும். அத்துடன் மாநிலங்களின் அதிகார பகிர்வு மற்றும் நிதி சுயசார்பு தன்மை ஆகியவற்றிற்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.
கூட்டாட்சி அமைப்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி போன்ற ஒருங்கிணைந்த வரி சீர்த்திருத்தம் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கிடையிலான ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த சீர்த்திருத்தங்கள் பரஸ்பர நம்பிக்கைகள் மற்றும் மதிப்புணர்வு அடிப்படையில் இருக்க வேண்டும். பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை மத்திய அரசு நடைமுறை படுத்தும் முறையானது மாநிலங்களின் நிதி சுயசார்பு தன்மையில் குறுக்கிடுவதாக அமைவதுடன் மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே கூட்டாட்சி அமைப்பில் நிதி அதிகார பகிர்வில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, பொருட்கள் மற்றும் சேவை வரி குறித்த முக்கிய பிரச்சனைகளில் விரிவான கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்கு மாநிலங்கள் தொடர்ந்து கலந்தாலோசனை செய்யப்படுவதற்கு தாங்கள் தலையிட வேண்டும் என்றும், அதன்பிறகே அரசியல் சாசன திருத்த மசோதாவை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications