பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை-ரத்து செய்யக்கோரி பாமக, விசி கருத்தரங்கம்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை சேர்ந்து வரும் 28-ம் தேதி சென்னையில் கருத்தரங்கம் நடத்தவுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட ராமதாஸ் கூறுகையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை சேர்ந்து வரும் 28-ம் தேதி சென்னையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த கருத்தரங்கில் நானும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் பேசவிருக்கிறோம். மேலும் இதில் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்றார்.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனித சங்கிலி போராட்டம்: பழ. நெடுமாறன் அழைப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வரும் 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடத்துமாறு அனைத்துக் கட்சிகளையும் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
தூக்கு மேடையின் நிழலில் நிறுத்தப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், சட்டப் புத்தகத்தில் இருந்து மரண தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 26-8-2011 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலிப் போராட்டம் நடத்துமாறு அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றை வேண்டிக்கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications