மாஜி காங். எம்.பி. அன்பரசு தலைமையில் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா

சமூக சிந்தனையாளர்கள் பேரவை சார்பாக இந்தப் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் அன்பரசு. இவரது தலைமையில் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரவையின் தலைவராக அன்பரசு உள்ளார். இதுகுறித்து அன்பரசு கூறுகையில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 5 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்காகவும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதற்காகவும் இந்த பாராட்டு விழாவை நடத்தவுள்ளோம்.
வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்ற சமூக சிந்தனையாளர்கள் பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த சமுதாயத்தின் பல்வேறு கோரிக்கைகள் இன்னம் நிறைவேற்றப்படாமலே உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தோம். அவர்கள் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் வெறும் கண்துடைப்புக்காக ஒரு வாரியத்தை வன்னியர் சொத்து பாதுகாப்பு வாரியம் அமைத்தார்கள். அதிலும் எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை. அந்த வாரியமும் செயல்படாமல் முடங்கி போனது.
தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா வன்னிய சமுதாயம் மட்டுமல்ல அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விடிவெள்ளியாக திகழ்கிறார். 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியதோடு அல்லாமல் 9வது அட்டவணையிலும் இடம் பெற செய்து சாதனை படைத்திருக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக செயல்படும் முதல்வர் ஜெயலலிதா இதுவரை இல்லாத அளவிற்கு 5 வன்னியர்களுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கிறார். இதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது என்று சமூக சிந்தனையாளர்கள் பேரவை முடிவெடுத்துள்ளது.
இன்று அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி இந்த கோரிக்கைகளோடு எங்கள் பேரவையை சேர்ந்த 25 பேர் கொண்ட குழு முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்பதோடு பாராட்டு விழா தொடர்பாகவும் அனுமதி பெற உள்ளோம் என்றார்.
இக்கூட்டத்தில், தமிழக அரசின் வாரியங்களில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். வன்னியர்கள் 5 பேர்களை அமைச்சர்களாக நியமித்ததற்கும், 25 பேர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க வாய்ப்பளித்ததற்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த பேரவை நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி ஜெயலலிதா
- இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தியதற்காகவும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 5 பேருக்கு அமைச்சர்கள் பொறுப்பு அளித்ததற்கும் நன்றி தெரிவிப்பதுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு "ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி' என்ற பட்டம் அளித்து பாராட்டு விழா நடத்துவது என்றும் இந்த பேரவை தீர்மானிக்கிறது.
- மாமல்லபுரம் அருகில் உள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ஆளவந்தான் உயிலில் குறிப்பிட்டுள்ள ஆயிரம் காணி நிலத்தை தமிழக அரசு கைப்பற்றி உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்றும் அதில் 70 விழுக்காடுகள் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் துணை வேந்தராக வன்னியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் இதற்கென ஒரு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை இந்த பேரவை கேட்டுக் கொள்கிறது.
- வன்னியர் குல சத்ரியர் பொது சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் நல வாரியம் ஒன்றை அமைத்திட வேண்டும். தமிழக அரசின் உயர் பொறுப்புகளுக்கு மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நியமனங்களிலும் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் பேரவை கேட்டுக் கொள்கிறது.
- பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு பட்டப் பெயர்களில் அழைக்கப்படும் வன்னியர்கள் அனைவரையும் வன்னியர் குல சத்ரியர் என்ற ஒரே பெயரில் தங்களை பதிவு செய்வதற்கும், கணக்கெடுப்பு நடத்தும் அலுவலர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய வழிகாட்டு ஆணையை வழங்க வேண்டும்.
- வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஆதிகேசவலு நாயகருக்கு சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முழு உருவச் சிலை நிறுவ வேண்டும். மற்றும் ராமசாமி படையாச்சியாருக்கு கடலூரில் சிலை நிறுவ வேண்டும். இவர்கள் இருவருடைய பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications