திமுக ஆட்சியில் எழுதப்பட்டிருந்ததை அதிமுக ஆட்சியில் அப்படியே காப்பி அடித்திருக்கிறார்கள்.. கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போதும், உப்பு சப்பில்லாத ஒரு சில அறிவிப்புகளையும், திமுகவை திட்டுவதையும் அந்தத் துறையின் அமைச்சர்களிடம் விட்டுவிட்டு, முக்கிய அறிவிப்புகளையெல்லாம் முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அவையிலே படிக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை'' பற்றிய விவாதம் கடந்த 25-8-2011 அன்று நடைபெற்று துறை அமைச்சரும் பதிலளித்து விட்டார். ஆனால் அந்தத்துறைக்கான முக்கிய சில அறிவிப்புகளையெல்லாம் முதல்வர் ஜெயலலிதா பேரவையில் 6-9-2011 அன்று 110-வது விதியின் கீழ் படித்திருக்கிறார்.

அதுபோலவே வீட்டு வசதித்துறை அமைச்சர் தனது மானியத்தின் மீதான விவாதத்தை 25-8-2011 அன்றே முடித்திருக்கும்போது, அந்தத் துறைக்கான அறிவிப்புகளை 8-9-2011 அன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின்கீழ் பேரவையில் படித்திருக்கிறார்.

இந்தத் துறையிலே மாத்திரமல்ல, ஒவ்வொரு துறை பற்றிய மானிய விவாதத்தின் போதும், உப்பு சப்பில்லாத ஒரு சில அறிவிப்புகளையும், தி.மு.கவை திட்டுவதையும் அந்தத் துறையின் அமைச்சர்களிடம் விட்டுவிட்டு, முக்கிய அறிவிப்புகளையெல்லாம் முதல்வரே 110-வது விதியின் கீழ் அவையிலே படிக்கிறார்.

முன்பெல்லாம் 110-வது விதியின் கீழ் அறிவிப்புகளைச் செய்தால் இப்படியெல்லாம் பாராட்டுகள் இருக்காது. ஆனால் சில நாட்களுக்கு முன்னால் முதல்வர் ஜெயலலிதாவே; பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தால் அதிலே கேள்விதான் கேட்கக்கூடாது, பாராட்டு கூறலாம், நன்றி தெரிவிக்கலாம் என்று கூறிய பிறகு; ஒவ்வொரு முறை 110-வது விதியின் கீழ் அவர் அறிவிப்புகளைச் செய்யும் போதும் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும், இதையே பெரிய வாய்ப்பாகக் கருதி, வரிசையாக எழுந்து பாராட்டுரைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் "மானியக் கோரிக்கையின் விளக்கக் குறிப்பு'' அந்தத் துறையின் அமைச்சர் சி.வி.சண்முகத்தால் தயாரிக்கப்பட்டு, அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த 2011-12-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பின் முதல் பத்தி வருமாறு:-

"மனித வள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இளைஞர்களிடையே சுகாதாரம், தோழமை, நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த தெளிவான தாக்கத்தை உண்டாக்கும்'' என்பதாகும்.

2010-2011-ம் ஆண்டுக்கான இந்த துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு திமுக அரசால் 13-5-2010 அன்று பேரவையில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்தக் கொள்கை விளக்கக் குறிப்பின் முதல் பத்தி வருமாறு:-

"மனிதவள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இளைஞர்களிடையே சுகாதாரம், தோழமை, நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த தெளிவான தாக்கத்தை உண்டாக்கும்'' என்பதாகும்.

அதாவது திமுக ஆட்சியில் கடந்த ஆண்டுகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் என்ன எழுதப்பட்டிருந்ததோ, அதை அப்படியே இந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் எடுத்து எழுதியிருக்கிறார்கள்.

இந்தத் துறையின் அமைச்சர் தனது பதிலுரையின்போது "கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்தத் துறையிலே எதுவுமே நடக்கவில்லை, கவியரங்கமும், சங்கமமும்தான் நடைபெற்றன'' என்று கூறிய காரணத்தால் திமுக ஆட்சியில் இந்தத் துறையின் சார்பாக எதுவும் நடக்காமல் இல்லை, என்னென்ன செய்யப்பட்டது என்பதைப்பற்றி ஒரு சிலவற்றை மட்டும் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுகளப் பாதை ரூ.240 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடத்திட ஆண்டு தோறும் ரூ.1 கோடி வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் பங்களிப்புடன் ரூ.60 லட்சம் செலவில் புதிய நவீன நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.60 லட்சம் செலவில் சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டுக் கிராமம், காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டரங்கம், சென்னை செனாய்நகர் நீச்சல் குள வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி, மதுரை மாவட்ட விளையாட்டு வளாகங்களில் விளையாட்டு வீரர்களுக்கான விடுதிகள் தலா ரூ.70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ரூ.70 லட்சம் வீதம் இரண்டு நவீன நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ரேஸ் கோர்ஸ் விளையாட்டரங்கத்தில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நவீன மின்னொளி அமைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னை உள் விளையாட்டரங்க மேற்கூரை ரூ.131 லட்சத்தில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டது. திருநெல்வேலியில் ரூ.70 லட்சத்தில் புதிய விளையாட்டு விடுதி கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ரூ.70 லட்சத்தில் புதிய விளையாட்டு விடுதி கட்ட அனுமதிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, இந்தத் துறையின் அமைச்சர்; அவையில் கூறியதைப் போல திமுக ஆட்சியில் கவியரங்கம், சங்கமமும் மட்டும் நடக்கவில்லை, அதுவும் நடந்தது, இது போன்ற எண்ணற்ற சாதனைகளும் செய்யப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ளலாம். செம்மொழி, கவியரங்கம், சங்கமம் இவைகள் எல்லாம் அவர்களுக்குப் பிடிக்காத அம்சங்களாகும். அதிமுக அமைச்சர்களில் இந்த அமைச்சர் ஒரு வித்தியாசமானவர் என்று நான் சற்று உயர்வாக இவரைப் பற்றி எண்ணியிருந்தேன். அவரும் அப்படித்தான் என்பதை இப்போது புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+