வங்கி ஊழியர் குழந்தை மாயம்: 5 நாட்களாகியும் துப்பு துலங்கவில்லை- சோகத்தில் பெற்றோர்
சென்னை: சென்னை, விருகம்பாக்கத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த வங்கி ஊழியரின் 2 வயது மகள் மாயமாகி 5 நாட்களாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை. இதனால் பெற்றோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விருகம்பாக்கம், மஜீத் நகர் வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(35). கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறார். அவரது மனைவி வசந்தி. அவர்களுக்கு தனுஷ் என்ற 6 வயது மகனும், கவிதா என்கிற 2 வயது மகளும் உள்ளனர்.
கடந்த 19-ம் தேதி காலை கணேசன் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் வசந்தியும், கவிதாவும் மட்டும் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் கவிதா வீட்டு வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருக்க வசந்தி சமையல் செய்து கொண்டிருந்தார்.
சமையலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தை கவிதாவை காணவில்லை. உடனே பதறிப்போன வசந்தி அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடினார். ஆனால் பலனில்லை. இதையடு்தது கணேசன் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், துணை கமிஷனர் அசோக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
குழந்தையை யாராவது கடத்தியிருக்கலாம் என்று கருதிய சண்முக ராஜேஸ்வரன் கணேசன் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார். போலீசார் வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளில் கவிதா படம் கொண்ட சுமார் 300 போஸ்டர்கள் ஒட்டினர். குழந்தை கவிதாவை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறி்த்து இதுவரை 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குழந்தை காணாமல் போய் 5 நாட்களாகியும் இன்னும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications