தற்கொலை செய்த கணவனின் உடலுடன் 3 நாட்கள் வாழ்ந்த பெண் அரசு அதிகாரி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கணவன் இறந்த 3 நாட்களானது கூட அறியாமல், பிணத்துடன் வசித்த அரசு பெண் அதிகாரியை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் தியாகராஜன். ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி குணபூஷணம். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தனர்.
தியாகராஜன் எப்போதும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் குணபூஷணத்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு போகாமல் குணபூஷணம் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். குணபூஷணத்தின் நிலையை கண்டு மனமுடைந்த தியாகராஜன் கடந்த 3 நாட்களுக்கு முன் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த குணபூஷணத்திற்கு இது குறித்து அறியாமல் அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தியாகராஜனின் வீடு திறக்கப்படாமல் உள்ளிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசிப்போர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை திறந்து பார்த்த போது, தியாகராஜனின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது. இதை அறியாமல் அந்த உடலுடன் வசித்த குணபூஷணம் அதன் அருகிலேயே மயங்கி கிடந்தார். தியாகராஜனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட குணபூஷணத்தை சிகிச்சைக்காக, மருத்துவனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications