திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட துணை நடிகை உள்பட 5 பேர் கைது
தூத்துக்குடி: தமிழகத்தை கலக்கிய வழிப்பறி கும்பலை சேர்ந்த துணை நடிகை உள்பட 5 பேரை தூத்துக்குடி, மெஞ்ஞானபுரம் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து வரும் பெண்கள் மற்றும் டூவீலரில் குடும்பத்துடன் வருபவர்களிடம், டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து எஸ்பி நரேந்திரநாயர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஆகிய சப்-டிவிசன்களில் சோதனை சாவடி அமைத்து இருசக்கர வாகன சோதனை நடத்தினர்.
கடந்த 4ம் தேதி மதியம் சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரத்தை சேர்ந்த முத்துவேல் என்பவர் ஆட்டோவில் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தண்டுபத்து பகுதிக்கு வந்து திரும்பும்போது ஒரு பெண் ஆட்டோவை வழிமறித்து சவாரிக்கு அழைத்துள்ளார். அப்போது மறைந்திருந்த 4 வாலிபர்கள் ஆட்டோ டிரைவரை தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்தனர்.
இதுபற்றி அவர் மெஞ்ஞானபுரம் போலீசி்ல் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் இரசலையன், ஏட்டு ரவிசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடினர்.
அப்போது மறவன்விளை அம்மன் கோவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆட்கள் நிற்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அவர்களை விசாரித்தனர்.
விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நாகர்கோவில் கோட்டார் வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த டேவிட், திண்டுக்கல் தம்பிக்கோட்டையை சேர்ந்த பிரதிவிராஜன், வேலூர் விசுவநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ், அதே ஊரை சேர்ந்த மஞ்சுநாதன், காயல்பட்டிணம் லட்சுமிபுரத்தை சேர்ந்த லதா என தெரிந்தது. அனைவருமே திருட்டுக் கும்பல் என்பது விசாரமையில் தெரியவந்தது.
லதாவை டேவிட் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். லதா ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்துள்ளார். இவர் சினிமாவில் துணை நடிகையாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வழிப்பறி வழக்குகளும் உள்ளன.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. நரேந்திரன் நாயர் கூறியதாவது, தமிழகத்தை கலக்கிய வழிப்பறி கொள்ளை கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 3.5 லட்சம் ரூபாய். இந்த வழிப்பறி கொள்ளையர்களை துப்பு துலக்கி கண்டுபிடித்த சப்-இன்ஸ்பெக்டர் இரசலையன், ஏட்டு ரவிசந்திரன் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும், என்றார்.












Click it and Unblock the Notifications