கோஷ்டி பூசலால் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கை சின்னத்தை இழந்த காங்கிரஸார்
களக்காடு: களக்காடு யூனியன் மாவட்ட கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேருக்கு இடையே நடந்த கோஷ்டி பூசலால் இருவருக்குகமே கை சின்னம் கிடைக்காமல் போய் விட்டது.
காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி மோதலுக்கு பஞ்சம் இருக்காது. களக்காடு யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணகுமார், பொன்னுத்துரை ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் அதிகாரியிடம் 2 பேரும் தங்களுக்கு கை சின்னம் ஒதுங்குமாறு கோரினர். கட்சி யாருக்கு அங்கீகாரம் அளிக்கிறதோ அவர்களுக்கே கை சின்னம் என அதிகாரி கறாராக தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் தங்களது ஆதரவு தலைவர்கள் மூலம் கட்சி அங்கீகாரம் பெற கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஒரே வார்டுக்கு 2 பேர் கை சின்னத்தை கேட்டதால் மேலிட தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமாதானம் செய்ய நடந்த முயற்சிகளும் தோல்வி அடைந்தது. வேறு வழியில்லாமல் 2 பேருக்கும் அங்கீகார கடிதம் கொடுத்தனர். அந்த கடிதங்களை தேர்தல் அதிகாரியிடம் அளித்து கை சின்னம் கோரினர்.
ஒரே வார்டில் 2 பேர் கை சின்னம் கேட்பதால், 2 பேருக்கும் அந்த சின்னம் வழங்க முடியாது என தேர்தல் அதிகாரி தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து கிருஷ்ணகுமாருக்கு கேரம் போர்டு சின்னமும், பொன்னுத்துரைக்கு கோட்டை சின்னமும் ஒதுக்கப்பட்டது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியினரின் கோஷ்டி பூசலால் கை சின்னம் பறிபோனது தான் மிச்சம்.












Click it and Unblock the Notifications