தொடர் பண்டிகைகளால் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மந்தம்
சென்னை: தொடர் பண்டிகைகளால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மிகவும் மந்தமாக நடக்கிறது. மக்களிடையும், அரசியல் தலைவர்களிடையேயும் பிரச்சார விறுவிறுப்பாக இல்லை.
தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், பிரச்சார பெரிய அளவில் நடக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவராத்திரி திருவிழாவோடு துவங்கிய கொண்டாட்டங்கள் நேற்றைய ஆயுத பூஜை வரை நீடித்தது. பள்ளில் காலாண்டுத் தேர்வுகளும் முடிவடைந்ததால், மக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டனர்.
வீடுகளில் இருப்போரும், வெளியே தலை காட்டாமல் உள்ளேயே நேரத்தை செலவிட்டனர். இதனால், வார்டு வேட்பாளர்கள் முதல், கட்சி தலைவர்கள் வரை பிரச்சாரத்தில் ஈடுபடும் ஆர்வமின்றி காணப்பட்டனர்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி ஆங்காங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினரும், ம.தி.மு.க.வும் தலைவர்களையும் பிரச்சாரத்தில் காண முடிகிறது. மேலும் புதிய தமிழகம், பா.ம.கா., தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய கட்சிகளான தி.மு.க. மற்றும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தரப்பில் பிரச்சார வேகம் சொல்லி கொள்ளும் அளவில் இன்னும் சூடுபிடிக்கவில்லை. தி.மு.க. தரப்பில் மு.க.ஸ்டாலின் மட்டும் சில இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரச்சாரம் காலம் முடிய இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சார களத்தில் இறங்கினால், பரபரப்பு அடையும் என தெரிகிறது.
தேர்தலுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கண்ணும் கருத்துமாக உள்ள மாநில தேர்தல் ஆணையம், அவ்வப்போது மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறது. திருச்சியில் அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா வரும் 9ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அதற்கு அடுத்த நாளான 10ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரச்சாரம் செய்வார். அதை தொடர்ந்து அக்டோபர் 12 மற்றும் 14ம் தேதிகளில் சென்னையில் உள்ள தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கருணாநிதி பிரச்சாரம் செய்வார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications