தாய்லாந்தில் கடும் புயலால் மழை- வெள்ளம்: 240 பலி
பாங்காக்: தாய்லாந்தில் கடும் புயலால் ஏற்பட்ட தொடர் மழையில், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி, இதுவரை 240 பேர் பலியாகி உள்ளனர்.
தாய்லாந்து நாட்டை கடந்த 6ம் தேதி முதல் கடும் புயல் தாக்கி வருகிறது. இதனால் நாட்டின் 58 மாகாணங்களில் உள்ள 179 மாவட்டங்களிலும் கடும் மழை பெய்தது. கடந்த 6ம் தேதி இரவு துவங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது. இதில் நாட்டின் அனைத்து பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 240 பேர் பலியாகி உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 700க்கும் மேற்பட்டோரின் வீடுகளை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. மழை வெள்ளத்தால், நாட்டில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளும் மந்தமாகவே நடந்து வருகிறது. தொடர் மழையால் சில இடங்களில் நிலசரிவுகளும் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 123 சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதால், நாட்டின் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். வெள்ளம், மழை, புயல் கால மீட்புக் குழுவினர், மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால், நாட்டில் மழை சில நாட்களுக்கு நீட்டிக்கலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications