அன்னா ஆதவாளர்கள் மீது பகத் சிங் கிராந்தி சேனே பயங்கர தாக்குதல்-3 பேர் காயம்
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து அன்னா ஹஸாரேவின் ஆதரவாளர்களை பகத் சிங் கிராந்தி சேனே ஆட்கள் பயங்கரமாக அடித்து நொறுக்கினர். இதில் காயம் அடைந்த 3 பேர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அன்னா ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷனை நேற்றுதான் பகத் சிங் கிராந்தி சேனே அமைப்பைச் சேர்ந்த 3 பேர் அவரது அறையில் வைத்தே அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவரை ஆர்.எம். எல். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதால் தான் தாக்கினோம் என்று அந்த அமைப்பு பேஸ்புக்கில் தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பரபரப்பே இன்னும் அடங்கவில்லை அதற்குள் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து அன்னா ஆதரவாளர்களை பகத் சிங் கிராந்தி சேனே ஆட்கள் அடித்து நொறுக்கினர். இதில் காயம் அடைந்த 3 பேரை அருகில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனால் அன்னா குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரசாந்த் பூஷன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் பூஷனையும், அன்னா ஆதரவாளர்களையும் தாக்கியது ஸ்ரீ ராம சேனே என்று சிலரும், பகத் சிங் கிராந்தி சேனே என்று சிலரும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications