பீட்டர் அல்போன்ஸுக்குச் சொந்தமான கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் பீட்டர் அல்போன்ஸ். மூப்பனாரின் வலது கரம் போல திகழ்ந்து வந்த இவர் இப்போது எந்த கோஷ்டியிலும் சேராமல் தனித்து செயல்பட்டு வருகிறார்.
தென்காசி அருகே ஆய்க்குடியில் இவருக்குச் சொந்தமான பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகள் உள்ளன. அதில் ஒன்று ஜேபி கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி ஆகும். இங்கு பிஎட் படித்து வரும் 75 மாணவ, மாணவியர் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தங்களது படிப்புக்குரிய அங்கீகாரத்தை கல்லூரி நிர்வாகம் பெறவில்லை. இதனால் தங்களது படிப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. அடையாள அட்டை, சீருடை கூட தரப்படவில்லை. இவையெல்லாவற்றையும் உடனடியாக தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து பீட்டர் அல்போன்ஸ் கல்லூரிக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் சமரசம் பேசினார். வழக்கு தொடரப்பட்டுள்ளது, விரைவில் அங்கீகாரம் கிடைத்து விடும். ஒருவேளை அதில் நம்பிக்கை இல்லாதவர்கள், விரும்பினால் வேறு கல்லூரிக்கு மாற்ற ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார்.
இருப்பினும் மாணவர்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளதால், பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications