ஜெயேந்திரர், புதுவை நீதிபதி பேசிய விவகாரம்- சிடி குறித்த விசாரணை முடிந்தது
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் புதுச்சேரி செஷன்ஸ் நீதிபதி ராமசாமியும், முக்கியக் குற்றவாளியான ஜெயேந்திரரும் தொலைபேசியில் பேரம் பேசுவது போன்ற ஆடியோ சிடி குறித்த ஆய்வு மற்றும் விசாரணை முடிவடைந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
சங்கரராமன் கடந்த 2004-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், காஞ்சிபுரம் சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர், அப்பு, ரகு உள்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். வழக்கின் சாட்சி விசாரணை புதுச்சேரி செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகி விட்டனர். இதனால் வழக்கின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், ஜெயேந்திரரும், நீதிபதி ராமசாமியும் செல்போனில் உரையாடுவது போன்ற ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பளிப்பது குறித்து நீதிபதியுடன் பண விவகாரம் குறித்து பேசுவதாக உள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த சிடி குறித்து விசாரிக்க வேண்டும் என்று சுந்தரராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்ற நீதிபதி சுகுணா, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் சிடி குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஊழல் கண்காணிப்புப் பிரிவு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இந்தப் பின்னணியில் சுந்தரராஜன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சிடி விசாரணை தொடர்பான அதிகாரிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ் குமார் கூறுகையில் சிடி குறித்த விசாரணை மற்றும் ஆய்வு முடிந்து விட்டது. 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்வோம் என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications