சென்னை: அப்பல்லோ மருத்துவமனை அருகே அதிமுக, திமுக தொண்டர்கள் மோதல்- பெண்ணுக்கு கத்திக் குத்து
சென்னை: சென்னையில் உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெடித்தது. ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட, கிரீம்ஸ் சாலையில், ஒரு வாக்குச் சாவடியைக் கைப்பற்ற அதிமுகவினர் முயன்றதைத் தொடர்ந்து அதைத் தடுக்க திமுகவினர் முயன்றதால் இரு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டன. இதில் ஒரு பெண் அரிவாளால் வெட்டப்பட்டார்.
தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருவதாக தேர்தல் ஆணையர் சோ. அய்யர் கூறியுள்ளார். ஆனால் சென்னையில் மட்டும் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது.
பல வாக்குச் சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றி சரமாரியாக கள்ளஓட்டுக்களைப் போடுவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் கிரீம்ஸ் சாலையில் இன்று பெரும் மோதல் மூண்டது.
சென்னை ஆயிரம் விளக்கு, மங்கி கார்டன் என்னும் பகுதியில் அதிமுக ஆதரவாளரான குட்டியம்மாள் (44) என்பவர் வாக்குச் சாவடிக்குள் சிலருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குட்டியம்மாளை உள்ளே போக விடாமல் அவர்கள் தடுத்தனர். அப்போது பெரும் மோதல் மூண்டது. இந்த சமயத்தில், திமுகவினர் கத்தியால் குட்டியம்மாளை குத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் இருந்த குட்டியம்மாளை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
தலைமறைவான திமுகவினர் 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications